» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 11:11:56 AM (IST)



மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.12) காலை கொடியேற்றத்துடன் தொடங்கிறது. முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கோயிலுக்குள் வாஸ்து சாந்தி (நிலத்தேவா் வழிபாடு) நடைபெற்றது. தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது. இன்று முதல் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்குமாசி வீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்

ஏப்.19ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.20ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். அன்றிரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். ஏப்.22ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். 

அதனை தொடர்ந்து ஏப்.23ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து அழகர் கோயில் திருவிழா 19ம் தேதி தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். ஏப்.22ம் தேதி அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்.23ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10க்குள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

ஏப்.24ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், ஏப்.25ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும். அன்று பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் அழகர், அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல், அன்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடைபெறுகிறது. 

ஏப்.26ம் தேதி அழகர் மலைக்கு புறப்படும். அன்று இரவு அப்பன் திருப்பதியில் விடிய விடிய திருவிழா நடைபெறும். அதனை தொடர்ந்து ஏப்.27ம் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்து சேரும். சித்திரைத் திருவிழா துவங்குவதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory