» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 5:08:30 PM (IST)



பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர்  திறந்து விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர்  பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. 

திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதையடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரக்காணி பகுதியில் கடல் நீர் உட்புகுந்து தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறியதை தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர்  திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் கோதையாறு வழியாக திற்பரப்பு அருவிக்கு வருவதால்  வறண்டு நிலையில் காணப்பட்ட திற்பரப்பு அருவியில் நேற்று இரவு முதல் தண்ணீர்  பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory