» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதில் தொடரும் குழப்பம்!

சனி 6, ஏப்ரல் 2024 8:45:08 AM (IST)

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடர்பாக கல்வித்துறை அறிவிப்பில் குழப்பம் நிலவுவதால், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். 

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு நாளை மறுதினத்துடன் (திங்கட்கிழமை) தேர்வு முடிவடைய இருக்கிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.

இதில் முதலில் வெளியான அட்டவணையில் 12-ஆம் தேதியுடன் தேர்வு முடிவு பெற்று, 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், ரம்ஜான் பண்டிகையை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வை 22 மற்றும் 23-ஆம் தேதிக்கு மாற்றி புதிய அட்டவணையை வெளியிட்டது.

இந்த அட்டவணை மாற்றத்தால் கோடை விடுமுறை எப்போது? என்ற கேள்வி எழுந்தது. 10, 12-ஆம் தேதியும், அதன் பின்னர் 22, 23-ஆம் தேதிகள் வரையிலான இடைப்பட்ட நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டுமா? என்ற குழப்பத்திலும் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் தவித்தனர். 

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை கோடை விடுமுறை தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்து விடுமுறை அளிக்கலாம் என தெரிவித்திருந்தனர். அவர்களும் நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிவிப்பும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 12-ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும். அவர்களை 22, 23-ஆம் தேதிகளுக்கான தேர்வுக்கு ஆசிரியர்கள் ஆயத்தப்படுத்த வேண்டும். 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு இருப்பதால், மாணவர்கள் அந்த நாட்களில் பள்ளிக்கு வரத்தேவையில்லை. 

மீண்டும் 22, 23-ஆம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வந்தால் போதும். ஆசிரியர்களுக்கு 26-ஆம் தேதி வரை வேலை நாட்கள் இருக்கிறது' என்று தெரிவித்திருந்தார். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 8-ம் வகுப்பு வரையில் வருவதால், அதற்கான அறிவிப்பு தெளிவாகிவிட்டது. ஆனால் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இதே நிலை பொருந்துமா? என்பதை பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உறுதி செய்யவில்லை. இதிலும் குழப்பம் நீடிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory