» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:47:48 PM (IST)

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. 

ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள 5-வது உயிர் ஜெயராமன் ஆவார்.

ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடர்பான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory