» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:22:16 AM (IST)



வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க சிலுவையில் அறையப்பட்டு உயிரை விட்ட இயேசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ‘ஈஸ்டர்' பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக ஈஸ்டர் பண்டிகை திகழ்கிறது.

இந்த ஆண்டு ஈஸ்டர் திருநாள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அப்போது பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. பேராலய கலையரங்கத்தின் மைய பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் நடந்தன.

இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஜெபம் செய்தனர். நள்ளிரவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலை அரங்கின் மேற்கூரையில் சிலுவைக்கொடியை கையில் தாங்கியபடி இயேசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஈஸ்டர் திருநாளை கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் வேளாங்கண்ணி வந்திருந்தனர்.

நேற்று காலையிலும் பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 6.45 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory