» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நவராத்திரி விழா பூஜை: திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் மீண்டும் குமரிக்கு வருகை!

திங்கள் 18, அக்டோபர் 2021 11:55:37 AM (IST)

திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜைக்கு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு வந்தன.

திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி அம்மன் சிலையும், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் மற்றும் குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜையில் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்ற பின் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரும் வழக்கம். இந்நடைமுறை மன்னர் ஆட்சி காலம் முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பர் பூஜித்ததாகக் கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமார கோவில் குமாரசுவாமி விக்ரகங்கள் பல்லக்கில் பத்மநாபபுரத்திலிருந்து அக். 3 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது. சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், மன்னர் பயன்படுத்திய உடைவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. 

இதைத் தொடர்ந்து அக்.4 ஆம் தேதி களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் சுவாமி விக்ரகங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய கேரள போலீஸாரின் அணிவகுப்புடன், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்றதையடுத்து அங்கிருந்து நேற்று திரும்பிய சுவாமி சிலைகள் அன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோவிலில் இரவு தங்கலுக்குப் பின் இன்று அங்கிருந்து திரும்பின. 

தொடர்ந்து காலை 9 மணியளவில் சுவாமி விக்ரகங்கள் களியக்காவிளைக்கு வந்தன. கேரள போலீஸார் உடன் வந்தனர். தொடர்ந்து சுவாமி ஊர்வல பொறுப்பை குமரி மாவட்ட அறநிலையத்துறை கண்காணிப்பாளர்கள் ப. ஆனந்த் (குழித்துறை), வி.என். சிவகுமார் (பத்மநாபபுரம்) ஆகியோரிடம் கேரள மாநில காவல்துறை சிறப்பு பிரிவு ஆய்வாளர் எஸ்.எஸ். அனில்குமார் ஒப்படைத்தார். 

திருவனந்தபுரம் ஊரக சிறப்புப் பிரிவு காவல்துறை உதவி ஆணையர் ஜோசப், திருவிதாங்கூர் நவராத்திரி சிறப்பு அறக்கட்டளை தலைவர் மாணிக்கம், செயலர் எஸ்.ஆர். ரமேஷ் ஆகியோர் உடனிருந்தார். தொடர்ந்து குழித்துறை மகாதேவர் கோவிலில் இன்று இரவு தங்கலுக்குப் பின் சுவாமி விக்ரகங்கள் நாளை செவ்வாய்க்கிழமை பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து முன்னுதித்தநங்கை அம்மன் சுசீந்திரம் கோவிலுக்கும், குமாரசுவாமி வேளிமலை கோவிலுக்கும் செல்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory