» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்: 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 5:36:33 PM (IST)
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (EPIC) சமர்ப்பிக்க வேண்டும். அது இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த 15.03.2026 அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வரும் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பின்வரும் புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஓர் ஆவணத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம்:
ஆதார் அட்டை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி அட்டை (MNREGA).
புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்.
தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை.
ஓட்டுநர் உரிமம் (Driving License).
வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card).
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் (NPR) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.
இந்திய கடவுச்சீட்டு (Passport).
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்.
நாடாளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை (UDID).
வெளிநாடு வாழ் இந்தியர்கள்: 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள், தங்களின் அசல் கடவுச்சீட்டை (Passport) மட்டுமே அடையாள ஆவணமாகக் காண்பிக்க வேண்டும்.
பிழைகள்: வாக்காளர் அடையாள அட்டையில் சிறு அச்சுப்பிழைகள் அல்லது எழுத்துப்பிழைகள் இருந்தாலும், வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்ய முடிந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
புகைப்படம் பொருந்தாமை: அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லாத பட்சத்தில், மேலே குறிப்பிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








