» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!

ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரைக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் ஊர் திரும்பியவர்கள் மீது லாரி மோதிய விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகிலுள்ள மஞ்சள் நாயக்கன்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் பொம்முசாமி மகன் விஜயகுமார் (32), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று மாலை, சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 11 பேரைத் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைக்குச் சுற்றுலா வந்துள்ளார்.

பின்னர் அவர்கள் அனைவரும் இரவு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் சோழபுரம் கிராமத்திற்குத் தனது ஆட்டோவில் புறப்பட்டுள்ளனர். தூத்துக்குடி - மதுரை 4 வழிச்சாலையில் எப்போதும்வென்றான் அய்யனார் ஹோட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் மரத்தடிகளை ஏற்றிச் சென்று நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் கிராமம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கிருஷ்ண லீலா (38) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த பவதாரணி (11), பாக்கியலட்சுமி (17), ராஜா வர்ஷினி (14), மகாலட்சுமி (19), சுபாஷிணி (21), மகாலட்சுமி (47), சீதாலட்சுமி (19), ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார், கார்த்திக் (20), ஸ்டீபன் ராஜ் (19) ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று திரும்பிய குடும்பத்தில் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory