» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1056 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:57:16 PM (IST)

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் 1056 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் இன்று கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக "உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 1056 மாணவ, மாணவியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : "உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கும் இந்நிகழ்ச்சியில் வருகை தந்து கலந்து கொண்டிருக்க கூடிய அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும், தமிழ் மொழியின் பெருமை பாதுகாக்கப்பட வேண்டும், தமிழ்மொழி வளர்ச்சியடைய வேண்டும், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். எல்லா திட்டங்களும் முத்திரை பதிக்கும் திட்டங்களாகும். கல்லூரி மாணவ மாணவியர்கள் உயர்கல்வி படிக்க வேண்டுமென்பதற்காக மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் எல்லாரும் இத்திட்டங்களில் பயனடைவீர்கள் என்று நினைக்கிறேன்.
இத்திட்டங்களின் வாயிலாக உங்கள் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000/- வரவு வைக்கப்படுகிறது. இத்தொகையினை உங்களின் கல்வி செலவுக்கும், புத்தகம் வாங்குவதற்கு, ஏதேனும் கூடுதல் பயிற்சி வகுப்புகள் செல்வதற்கும், போக்குவரத்து செலவுக்கும் என்று உங்கள் கல்விக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அதேப்போல் பசிப்பிணி நீக்கிட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது போல் அறிவு பசிக்காக உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் மூலம் மடிக்கணினிகளை வழங்குகிறார்கள் நமது தமிழ்நாடு முதலமைச்சர் 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் மாணாக்கர்களுக்கு அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுவிட்டது.
அதுப்போல் தனியார் கல்லூரிகளில் பயிலுகின்ற மடிக்கணினி மிகவும் தேவையுள்ள மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இன்றையதினம் மடிக்கணினி வழங்கப்படுகிறது. இது மிகவும் போட்டி நிறைந்த உலகம் என்பதை மாணவ மாணவியர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். படிப்பதை கடமைக்காக எனவும், பெற்றோர்களுக்காக என்றும் அல்லது ஒரு பட்ட படிப்புக்காக படிக்கிறேன் என்ற எண்ணத்தில் இருந்தால் அந்த எண்ணத்தை தவிர்த்து விடுங்கள்.
திறமை மற்றும் திறன் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். "காலம் பொன் போன்றது” எனவே கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் என மாணவ மாணவியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் படி, இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அகில இந்திய அளவில் 6.5 சதவீதம் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேப்போல் தமிழ்நாட்டில் தான் தொழில் வளர்ச்சி அதிகம். மின்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் முன்னிலை வகிக்கிறது. வறுமை கோட்டு பட்டியலுக்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் முன்னிலை வகிக்கிறது. உழைக்கும் மகளிர்கள் 41 சதவீதம் இருக்கின்றனர். அதாவது அதிகளவிலான உழைக்கும் மகளிர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர்கள் அதிகம் இருக்கின்ற மாநிலமும் தமிழ்நாடாகும். இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் உலகம் உங்கள் கையில் திட்டத்தினை போன்று பல்வேறு முத்திரை பதிக்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதால், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
மேலும், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சிறந்த முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்ட பொழுது, நான் சிறந்த முதலமைச்சர் என்பதை எதிர்பார்க்கவில்லை, தமிழ்நாடு சிறந்த மாநிலமாகவும், முன்னிலை பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு என்று கூறினார்கள். அந்த இலக்கை நோக்கி பயணித்து, இன்றைக்கு தமிழ்நாடு அதனை அடைந்துள்ளது. இன்னும் நாம் வளர்ச்சி பெற வேண்டும், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரின் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அதன்மூலம் அனைவரும் பயனடைய வேண்டும்.
நாளைய தலைவர்கள் நீங்கள் தான். தமிழகத்தின் வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். தமிழ் மொழியை காப்பதற்காக போராடி, உயிர் நீத்து, இன்றைக்கு தமிழ் மொழி பெருமை பெற்றுள்ளது. செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. உலகமெங்கும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நமது மொழிக்காக தியாகம் செய்த தியாக சிந்தனையாளர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் நம் நாடு மற்றும் நம் மொழியினை காத்திட வேண்டும். நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும்.
மாணாக்கர்களாகிய நீங்கள் அனைவரும் இந்த மடிக்கணினியைப் பெற்றுக் கொண்டு உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். அதில் அறியப்படத்தக்க நல்ல பல தகவல்கள் இருக்கிறது. இது ஏஐ உலகம் ஆகும். எனவே, ஏஐ வசதிகளுடன் இந்த மடிக்கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் படிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த மடிக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) நாகராஜன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றான் தாய் மனப்பான்மை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் ஒதுக்கவில்லை. திருக்குறள் கூட படிக்கவில்லை. மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு என்று எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் எதற்குமே அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.. திமுக அரசை தொடர்ந்து விஜய் விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் புரியாமல் பேசுகிறார் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்
புதன் 1, ஏப்ரல் 2026 8:28:58 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!
புதன் 1, ஏப்ரல் 2026 8:15:42 AM (IST)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்
புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி!
புதன் 1, ஏப்ரல் 2026 7:48:48 AM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)







