» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நத்தைகுளத்தில் புதையுண்டு காணப்படும் கடல்சார் நத்தைகளின் படிமங்கள் : தொல்லியல் ஆர்வலர் தகவல்

வெள்ளி 30, ஜனவரி 2026 11:26:51 AM (IST)


ஆறுமுகநேரி அருகில் உள்ள 'நத்தைகுளம்' முழுமையும் கடல்சார் நத்தைகளின் படிமங்கள் புதையுண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது "தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 5.0கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சுமார் 250ஏக்கர் பரப்பளவு கொண்ட நத்தை குளம். இந்த பகுதியானது வட்டத்தின் பரிதி போன்ற பேலியோ சானல்கள் அமைப்பில் காணப்படும் வன்னிமானகரம் குளம் (8°32'16"N 78°04'07"E), நத்தை குளம்( 8°32'57"N 78°04'34"E), புதுக்குளம் (8°34'21"N 78°04'51"E), நல்லூர் குளம்(8.588746,78.059890) ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். 

இந்த பகுதிகள் யாவும் தொன்மையான குறிப்புகளின் அடிப்படையில் இராபர்ட் ஓரம் வரைந்த 1778ம் ஆண்டு வரைபடத்தில் காணப்படும் சுமார் 6.8கி.மீ நீளம் கொண்ட, கடல் நீர் உட்புகும் கால்வோயோடு கூடிய, சுமார் 5.4கி.மீ விட்டம் கொண்ட , இயற்கையால் மூடப்பட்ட முத்துக்கள் விளைவிக்கும் குளம் என கருதப்படும் பண்ணை குட்டை யின் உட்பகுதியின் எச்சங்கள் என உணரப்பட்டது.

இந்நிலையில் இந்த பகுதியில் 28.01.2026 அன்று கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் நத்தை குளத்தின் கரையில் காணப்படும் புதைபடிவ நிலை அடைந்த நன்னீர் மொல்லஸ்க் போன்ற கடல்சார் தொல்லுயிர் தொன்மங்களை கண்டறிந்து வியப்படைந்தோம். நமது முன்னோர்கள் காரணப்பெயராக இந்த பகுதிக்கு நத்தை குளம் என அழைத்து வந்துள்ளனர் என புலனாகிறது.

இந்த குளம் முழுவதும் சுமார் 5 அடி ஆழத்தில் இத்தகைய தொல்லுயிர் தொன்மங்களை காணமுடிகிறது என்பதும், ஒரு சில இடங்களில் கடினமான படிம பாறைகளையும் காணமுடிகிறது என்பதும், இந்த பகுதியின் மேற்கு பகுதியில் காணப்படும் புதுக்குடி என்ற காரணப்பெயர் கொண்ட குளத்தின் உட்பகுதி முழுவதும் தேரிக்காட்டு(மண்ணூர் என குறிப்பிடப்படும்) பகுதியின் மண்ணால் நிறப்பப்பட்டுள்ளது என்ற தெளிவன விபரங்களை ஊர்மக்கள் வாயிலாக கேட்டறிந்தோம். மேலும் அவர்கள் ஏப்ரல் மாதம் வருகை தந்தால் முழு கள நிலவரத்தை கண்டுணர்ந்து பதிவு செய்யலாம் என்றனர்.

பொதுவாக நன்னீர் மொல்லஸ்க் ஓடுகள், கடல் காயல் குளம் பகுதிகளில், குறிப்பாக நன்னீர் உள்வரும் உப்புத்தன்மை கொண்ட சூழலை உருவாக்கும் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலான மொல்லஸ்க்குகள் கடல்வாழ் உயிரினங்களாக இருந்தாலும், கணிசமான எண்ணிக்கையிலான இனங்கள் நன்னீருக்குத் தகவமைத்துக் கொண்டுள்ளன, மேலும் சில உவர் நீரின் மாறுபட்ட உப்புத்தன்மைக்கு அதிக சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன என்பது அறிவியல் கூறும் உண்மை.

காயல்பட்டினம் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 6.8கி.மீ வரை வில் போன்ற தோற்றத்தில் கடல் நீர் உட்புகும் காயல் போன்ற பகுதி அமைக்கப்பட்டிருந்ததாக இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இந்த 250 ஏக்கர் பரப்பளவு பகுதி வரை காயல் எனப்படும் பகுதி இருந்து வந்துள்ளது புலனாகிறது. எனவே இத்தகைய நன்னீர் மொல்லஸ்க் போன்ற சில கடல்சார் உயிரிகள் பரவலாக இந்த பகுதியில் வாழ்ந்திருந்து, பின்னர் இயற்கையால் மண்ணில் புதையுண்டு புவியியல் மாற்றத்தின் காரணமாக புதைபடிவ நிலையினை அடைந்திருக்க வேண்டும்.

எனவே இத்தகைய பேலியோ சானல் மற்றும் குளத்தின் அமைவிட பகுதிகளில் இராபர்ட் ஓரம் வரைபடம் புள்ளிகள் வாயிலாக புவியியல் ஆய்வு செய்திட உண்மை விபரங்களை அறிய ஏதுவாக அமையும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory