» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலைமறியல், கடையடைப்பு போராட்டம்!

வெள்ளி 30, ஜனவரி 2026 8:09:04 AM (IST)



தெற்கு ஆத்தூரில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள், வியாபாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர் மெயின் பஜாரில் சினிமா தியேட்டரை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு தினமும், தெற்கு, வடக்கு ஆத்தூர், புன்னக்காயல், ஆறுமுகநேரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான குடிமகன்கள் வந்து மதுபானத்தை வாங்கி, குடித்து விட்டு தெற்கு ஆத்தூரில் அட்டகாசம் செய்து வருகின்றனர். 

இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சாலையில் பெண்கள், மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என நடப்பதற்கே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தில் பஜார் வியாபாரிகள் சங்கம், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கடைஅடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று காலை 9:15 மணிக்கு ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்கம் முன்பு தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.கே.செல்வராஜ், பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் அரசகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி மார்க்கத்திலிருந்து வந்த வாகனங்கள் முக்கானி ரவுண்டானாவிலிருந்து திருப்பி விடப்பட்டு, ஏரல், குரும்பூர் வழியாக திருச்செந்தூருக்கும், அந்த பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் ஆறுமுகநேரியிலிருந்து குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடிக்கும் திருப்பிவிடப்பட்டன.

இதை தொடர்ந்து திருச்ெசந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாடார் சங்க தலைவர், துணைத் தலைவர் பிரேம்குமார், செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் முத்து செல்வம், பஜார் வியாபாரிகள் சங்கத் தலைவர், தெற்கு ஆத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் காதர் கலந்து கொண்டனர்.

அப்ேபாது, டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். தெற்கு ஆத்தூர் பஸ்நிறுத்தத்தில் இருமார்க்கத்திலும் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து டிஎஸ்பி கூறுகையில், இன்று(நேற்று)ஒரு நாள் அரசு மதுபான கடை மூடப்படும். கடையை அகற்றுவது குறித்து மாவட்ட ஸ்பி மூலம் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தெற்கு ஆத்தூர் பஜார் பஸ்நிறுத்தத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் நின்று பொதுமக்களை ஏற்றி இறக்கி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

இதை கண்காணிக்க தினமும் 4 போலீசார் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு அனைத்து பஸ்களிலும் பயணிகள் ஏற்றி செல்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். 

இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தெற்குஆத்தூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory