» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியே: சிபிஎம் மாநிலச் செயலர்

சனி 20, செப்டம்பர் 2025 8:29:23 AM (IST)

தவெக தலைவர் விஜயின் பிரசாரத்துக்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியேஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு பிறகு நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட நிகழாண்டு 30 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு இப்போதே மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்தந்த துறைகள் மூலமாகவோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டு ஊழியர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழக அரசு, ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. இனிமேல் இந்த நிறுவனம் மூலமே பல்வேறு துறைகளுக்கு அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்வதுதான் அரசு இந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் முக்கிய நோக்கமாகும். தமிழக அரசின் ஊழியர் விரோதக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படியே பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கும் திமுக அரசின் அன்புக்கரங்கள் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தவெக தலைவர் விஜயின் பிரசாரத்துக்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியே. விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோருக்கு ஆரம்பத்தில் கூடிய கூட்டம் பின்னர் காணாமல்போனது. எனவே, வரும் 2026 பேரவைத் தேர்தலுக்குப் பிறகுதான் விஜயின் பலம் தெரியவரும். கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது. இந்த விழா அதிமுக, பாஜக கட்சிகள் சார்பில் நடைபெறுகிறது. தீப்பெட்டித் தொழில் நலிவடைய காரணமே மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரிதான்.

தீப்பெட்டிக்கு 18 சதவீத சரக்கு சேவை வரி விதித்து தீப்பெட்டித் தொழிலை அழித்துவிட்டனர். சிகரெட் லைட்டர் பயன்பாட்டால் தீப்பெட்டித் தொழில் மேலும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தீப்பெட்டித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory