» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புத்தகத்திருவிழாவில் ரூ.1.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:09:34 AM (IST)

தூத்துக்குடியில் 10 நாட்களாக நடந்த புத்தகத்திருவிழாவில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட புத்தக திருவிழா செயலாக்க குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தின் 6-வது புத்தகத் திருவிழா 'தொடர்ந்து படி தூத்துக்குடி' என்ற தலைப்பில் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. 10 நாட்களாக நடந்த புத்தக திருவிழா நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நடந்த நிறைவுவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இந்த புத்தகத் திருவிழா என்பது பெயரளவுக்கு நடத்தப்படாமல், உண்மையிலேயே புத்தகத் திருவிழா நல்ல ஒரு திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து குழந்தைகளும் எவ்வாறு பணம் சேமித்து புத்தகத் திருவிழாக்களில் புத்தகம் வாங்குவது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விழிப்புணவை ஏற்படுத்தி உள்ளார். இங்கு வந்த மாணவர்களை உண்டியலோடு பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த புத்தக திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் இளம்பகவத் பேசும் போது, 6-வது புத்தகத் திருவிழா வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த புத்தக திருவிழாவில் 10 நாட்களும் சேர்த்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு வருகை புரிந்து புத்தகங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகை புரிந்து புத்தகங்களை வாங்கி உள்ளனர். 10 நாட்களில் ரூ1.10 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பதாக புத்தக விற்பனையாளர்கள் தகவல் அளித்து உள்ளனர். இந்த அற்புதமான புத்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், பபாசி அமைப்பின் செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory