» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடைவுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 28வது இடம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:21:33 PM (IST)

மாநில அளவில் SLAS பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் 28வது இடத்தில் உள்ளது, அதனை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி , சுப்பையா வித்யாலயம் (பெ) மேல்நிலைப்பள்ளியில் இன்று (25,08,2025) பள்ளிக்கல்வித்துறை சார்பாக தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கின்ற அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏறத்தாழ 2 முதல் 3 மாதங்களாக SLAS க்கான முழு அறிக்கை பெறப்பட்டவுடன் இதற்கான ஆய்வுக்கூட்டத்தை பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில் இந்த ஆய்வுக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் உள்ளன? எங்கெல்லாம் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றது? எங்கெல்லாம் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திற்காக உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதுமட்டுமின்றி பள்ளிகளுக்கு நடைபெறுகின்ற கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளிகளை ஊக்குவித்து தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு இன்று 24 வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளது. அந்த சவால்களை கடந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்கூட்டமானது உங்களை ஊக்குவித்து, அடுத்த முறை தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று பாராட்டுகின்ற நிலைக்கு வருவதற்காக தான் நடத்தப்படுகிறது.
சிறப்பாக செயல்பட்டிருக்கின்ற பள்ளிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேப்போல் அனைத்து பள்ளிகளும் முதல் இடத்தை பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் SLAS அறிக்கை பெறப்பட்டுள்ளது.
உதாரணமாக 9 இலட்சத்து 80 ஆயிரத்து 340 குழந்தைகளின் அறிக்கையானது 3 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்பு என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருமிருந்து பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இங்குள்ள தலைமையாசிரியர்களுக்கு ஏற்றுக் கொள்ளும் தன்மை உள்ளது. எல்லா ஆசிரியர்களும் தாங்கள் நினைக்கிறதை சொல்ல முடியாத நிலையில் உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் தாங்கள் நினைத்ததை செயல்படுத்துகின்றவர்களாக இருக்கலாம்.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்கின்ற பொழுதுதான் நமது மாவட்டத்திற்கு பெருமை.
இது தனிப்பட்ட ஒருவரின் பெருமைக்காக அல்ல. மொத்தமாக நமது மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அமைச்சர் என அனைவருக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அமைய வேண்டும். மாநில அளவில் SLAS பொறுத்தவரையில் நமது மாவட்டம் 28வது இடத்தில் இருக்கின்றோம். அதனை உயர்த்துவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அறிக்கை என்பது ஒவ்வொரு பள்ளிகளுக்குமானது. எனவே, அந்தந்த பாட ஆசிரியர்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு செயல்பட வேண்டும்.
SLAS அறிக்கை குறித்த கருத்து பற்றி நாம் அனைவரும் உள்வாங்கி கொள்ளவேண்டும். தலைமையாசிரியர் என்பவர்கள் கப்பலின் தலைவர் போன்று அனைத்து ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்றவுடன் அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும் உங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஆகவே, SLAS அறிக்கையினை முன்னேற்றுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்விதுறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நகரப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நாளை விரிவுபடுத்த உள்ளார்கள். இந்தியாவிலேயே யாரும் சிந்திக்காத திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்துவதற்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், 5ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம், 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திறன் திட்டம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஏறத்தாழ 22 ஆயிரத்து 931 தொடக்கப்பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் உங்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்தி வருகிறார்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எவ்வாறு பாடம் நடத்த போகிறோம்? பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பெருமைக்காக மதிப்பெண் எடுக்க வைத்தால் மட்டும் போதாது, மாணவர்களிடையே புரிதல் தன்மையை எவ்வாறு உருவாக்க போகிறோம்? என்பதை எண்ணிப் பார்த்து செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் பணி என்பது அறம் சார்ந்த பணியாகும். நமது ஆசிரியர்களிடம் அதிக அளவில் பெருமை சார்ந்த வளங்கள் உள்ளது. அதனை எவ்வாறு செயல்படுத்த உள்ளோம் என்பதையும், குழந்தைகளுக்கு புரிதல் தன்மையுடன் நடத்துவதையும் எண்ணி பார்க்க வேண்டும்.
தொடக்க்கல்வி அளவில் நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்ற அடிப்படை கல்வியானது தான் அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டுச் செல்லும். ஆகையால் குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டுவர வேண்டும். தாங்கள் கற்றுக் கொண்டது வெற்றியை அளிக்கின்றபட்சத்தில் அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். சில ஆசிரியர்கள் கடினமான பாடத்தை மிக எளிமையாக கற்றுக் கொடுக்கின்ற பொழுது அதற்கான வீடியோக்களை நீங்களும் வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர் பணியினை அர்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்த வேண்டும்.
நமது தூத்துக்குடி மாவட்டம் தொழில்வளம் சார்ந்த பகுதியாகும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றன என்றால் அதற்கான காரணம் தொழில் மற்றும் கல்வி அறிவு சார்ந்த வளங்கள் இங்கு உள்ளது. குறிப்பாக அறிவு மற்றும் சக்தி சார்ந்த இளைய சமுதாயத்தினர் உருவாக்கி இருக்கின்றனர் என்றால் ஆசிரியர்கள் தான் காரணம். குழந்தைகளுக்கு எவ்வாறு புரிதல் தன்மையுடன் நடத்தலாம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக SLAS அறிக்கையில் நமது மாவட்டம் குறைந்ததற்கு காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்பில் சொல்லப்பட்ட கருத்துக்கள் கால மேலாண்மையை சரியாக பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களான நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து நாம் செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று குறிப்பிடுகின்ற மாதிரி செயலிலும் செயல்பட்டு வருகிறார். இதனை பயன்படுத்திக் கொண்டு அறிவு சார்ந்த சமுதாயத்தை நாம் உருவாக்கிட வேண்டும். நமது துறை சார்ந்த அளவில் எடுக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் இலக்குகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கின்ற பொழுது அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும்.
அரசு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் ஐ.ஐ.டி உள்ளிட்ட உலகத்தின் முக்கிய பல்கலைகழங்களில் பயின்று வருகின்றனர். அதற்கு காரணம் ஆசிரியர்களாகிய நீங்கள் தான். ஆகவே மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். இங்குள்ள தலைமையாசிரியர்கள் இக்கூட்டம் முடிந்து செல்கின்றபோது அடுத்த முறை நடைபெறுகின்ற கூட்டத்தில் எனது பள்ளியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வருவேன் என்ற இலக்குடன் செயல்பட அனைவரையும் வாழ்த்துகிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சி புத்தகத்தினை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலர் (பொ) து.சிதம்பரநாதன், முதல்வர் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வானரமுட்டி முனைவர் கா.அன்றோ பூபாலராயன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சா.ரவீந்திரன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










