» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் 66.88% வாக்குப் பதிவு : ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி 20, ஏப்ரல் 2024 5:24:37 PM (IST)



தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 66.88% வாக்காளர்கள் தங்களின் வாக்கினை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 1624 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மிகவும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் நடைபெற்றது. இத்தொகுதியில் 472056 ஆண் வாக்காளர்களும் 503325 பெண் வாக்காளர்களும் மற்றும் 87 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 975468 (66.88%) வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விபரம்



மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலமாக காவல்துறை பாதுகாப்புடன் தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர், வேட்பாளர் மற்றும் முகவர்களின் முன்னிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக காப்பு அறைகளில் (Strong Rooms) பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை மூலமாக மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தினை 24 மணி நேரமும் கண்காணிக்க முழுநேர சிசிடிவி காமெராக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் வருவாய்துறை அலுவலர்களை நிர்வாக நடுவர்களாக நியமனம் செய்தும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறை மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக வாக்குப் பதிவு குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் முக்கிய தேர்தல் ஆவணங்களை வேட்பாளர் மற்றும் முகவர்களின் முன்னிலையில் கூராய்வு (Scrutiny) செய்யப்பட்டது. உரிய நடைமுறைகளின்படியும் எந்தவொரு விதி மீறல் இல்லாமலும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக, கூராய்வில் அறியப்பட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவிற்கான சூழல் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது.

மேற்படி வாக்குப் பதிவு மிகவும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

m.sundaramApr 20, 2024 - 08:46:02 PM | Posted IP 162.1*****

Congratulation Dist Election Officer cum Dist Collector.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory