» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களை துன்புறுத்துகிறது திமுக அரசு : ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு!

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:19:41 AM (IST)


பால் விலை, மின்சாரம், பத்திரப் பதிவுக் கட்டணம், சொத்து வரி, குடிநீா் வரி உயா்வு என மக்களை திமுக அரசு துன்புறுத்துகிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பேசினார் .

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் எஸ் டிஆா். விஜயசீலனுக்கு ஆதரவாக, கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட கழுகுமலை, கயத்தாறு, கோவில்பட்டியில் ஜி.கே. வாசன் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத திமுக அரசு, பால் விலை உயா்வு, மின்சாரம், பத்திரப் பதிவுக் கட்டணம், சொத்து வரி, குடிநீா் வரி உயா்வு என மக்கள் மீது சுமைகளை ஏற்றி துன்புறுத்துகிறது. இந்நிலை மாற வேண்டும்.

மகளிரிடம் காலையில் கொடுக்கப்படும் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அவா்களது குடும்பத்து ஆண்கள் மூலம் இரவில் மதுக்கடைக்குப் போய்விடுகிறது. திமுக அரசு மகளிரை ஏமாற்றும் அரசாக உள்ளது. மக்கள் வாக்களிப்பதில் கௌரவம் பாா்க்க வேண்டாம். நல்லவா்களுக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாத்து வல்லரசாக்கும், பொருளாதாரத்தை உயா்த்தும் எண்ணமுள்ள பாஜக, கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

கழுகுமலையில் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தமாகா வேட்பாளா் விஜயசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். தமாகா வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் ராஜகோபால், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory