» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஓமன் சென்றார். அவரது முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஓமன் வர்த்தக அமைச்சர் குவாயிஸ் பின் முகமது அல் யூசப் கையெழுத்திட்டனர்.
இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகள், வாகனங்கள் உள்ளிட்ட 99 சதவீத பொருட்களுக்கு ஓமனில் அடுத்த ஆண்டு முதல் வரி ரத்தாகிறது. அதேபோல, ஓமனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம், பளிங்கு கற்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் உட்பட 95 சதவீத பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளது.
ஓமனில் இருந்து ஆண்டுக்கு 2 ஆயிரம் டன்பேரீச்சம்பழங்களை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒப்பந்த நிகழ்ச்சிக்கு பிறகு, இந்திய வம்சாவளியினர், தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அவர் பேசியதாவது: தீபாவளிப் பண்டிகையை யுனெஸ்கோ தனது கலாச்சார பட்டியலில் இணைத்துள்ளது. இனி நம்தீபம் உலகையே ஒளிரச்செய்யும்.
இந்தியாவும், ஓமனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இது இரு தரப்பு உறவில் புதிய நம்பிக்கை, உத்வேகம் அளிக்கும். கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. கொள்கைகளை மட்டுமின்றி, பொருளாதாரத்தின் மரபையே இந்தியா மாற்றியுள்ளது. ஓமன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து, வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
ரூ.94 ஆயிரம் கோடி வர்த்தகம்: இந்தியா - ஓமன் இடையே இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2024-25-ல் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்தது. இதில் ஏற்றுமதி ரூ.36 ஆயிரம் கோடி, இறக்குமதி ரூ.58 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்திய விவசாயிகள், குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலன் கருதி பால் பொருட்கள், தேயிலை, காபி, ரப்பர், புகையிலைப் பொருட்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள், உலோக கழிவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்தியா வரிச்சலுகை அளிக்கவில்லை. இதனால், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பட்டியலில் இவை இடம்பெறவில்லை.
மோடிக்கு ஓமனின் உயரிய விருது: பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளும் அவருக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரவித்து வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே 28 நாடுகள் அவருக்கு தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை வழங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா - ஓமன் உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ என்ற விருதை ஓமன் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் நேற்று வழங்கி கவுரவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா மீதான வரி 18% ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:09:26 PM (IST)

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 5:10:09 PM (IST)

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:34:29 PM (IST)

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்
சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)









