» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்கள், திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களை எச்1பி விசா மூலம் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தி வந்தன. இந்த விசாவுக்கான கட்டணம் ரூ. 1,80,000 (2,000 அமெரிக்க டாலர்) முதல் ரூ. 4,52,000 (5,000 அமெரிக்க டாலர்) வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ரூ.9 கோடியில் (10 லட்சம் அமெரிக்க டாலர்) அமெரிக்க குடியுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் கடந்த புதன் கிழமை தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், ‘‘அமெரிக்காவின் வார்ட்டன், ஹார்வர்டு, எம்ஐடி பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், படிப்பை நிறைவு செய்த பிறகு அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். புதிய கோல்டு கார்டு விசா திட்டத்தின் மூலம் வெளிநாடுகளை சேர்ந்த திறமையான மாணவ, மாணவியர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும்.
இதன்மூலம் அமெரிக்காவுக்கு தேவையான திறன்வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கிடைப்பார்கள். அதோடு ரூ.9 கோடியில் கோல்டு கார்டு விசா பெறுவதன் மூலம் அமெரிக்க அரசின் கருவூலமும் நிரம்பும். சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்களே விசா கட்டணத்தை செலுத்தி உயர்தொழில்நுட்ப திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களை தக்க வைக்க முடியும்’’ என தெரிவித்திருந்தார்.
இந்த கோல்டு கார்டு விசா திட்டம் குறித்த விவரங்களைத் தெரிவித்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், ‘‘விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.13 லட்சம் ஆகும். விண்ணப்பதாரர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அவரிடம் நேர்காணலும் நடத்தப்படும். விண்ணப்பம் ஏற்கப்பட்டால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும். இந்த விசாவை பெற தனிநபருக்கு ரூ.9 கோடி (10 லட்சம் டாலர்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே விசாவை நிறுவனங்கள் பெற ரூ.18 கோடி (20 லட்சம் டாலர்) கட்டணம் செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு பெற 15 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுகிறது. ஆனால் கோல்டு கார்டு விசாவை 4 மாதங்களில் பெற முடியும். கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் கோல்டு கார்டு விசா பெறுவோருக்கும் கிடைக்கும்’’ என தெரிவித்தனர்.
டொனால்டு டிரம்ப்பின் இந்த திட்டத்தை எதிர்த்து கலிஃபோர்னியா, நியூயார்க், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி, வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்கள் பாஸ்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது: எச்1பி விசா கட்டணம் 2,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை இருந்த நிலையில், தற்போதைய கோல்டு கார்டு திட்டத்தால் கட்டணங்கள் பல மடங்கு உயர்கின்றன. இவ்வாறு கட்டணத்தை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது. இது மத்திய சட்டத்தை மீறும் செயல். விசா நடைமுறைகளை நிர்வகிப்பதற்கான செலவை ஈடு செய்யத் தேவையான கட்டணங்களை மட்டுமே குடியேற்ற அதிகாரிகள் வசூலிக்க முடியும்.
எச்1பி விசா திட்டம், அமெரிக்க நிறுவனங்கள் சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது. கலிஃபோர்னியாவில் தங்கள் தலைமையகத்தை அமைத்துள்ள பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள், எச்1பி விசா பெறும் ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ளது.
கோல்டு கார்டு விசாவுக்கு ஒரு மில்லியன் டாலர் கட்டணம் நிர்ணயிப்பது கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கிய சேவைகளை வழங்குபவர்களுக்கு தேவையற்ற நிதிச் சுமையை உருவாக்கும். மேலும், இது தொழிலாளர் பற்றாக்குறையை மோசமாக்கி, சேவைகளை பாதிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா மீதான வரி 18% ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:09:26 PM (IST)

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 5:10:09 PM (IST)

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:34:29 PM (IST)

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்
சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)









