» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசாவில் பட்டினியால் உயிரிழப்புகள் அதிகரிப்பு : ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!

புதன் 23, ஜூலை 2025 12:48:36 PM (IST)



காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறல்கள் அரங்கேறுவது தொடர்கிறது. ‘ராணுவ நடவடிக்கை காரணமாக உறவு, உடமை என அனைத்தையும் இழந்து நிற்கும் காசா வாழ் மக்களுக்கு உண்ண முறையான உணவு கூட கிடைப்பதில்லை. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்தனர். அதில் 31 பேர் உதவி தேடி சென்றவர்கள். இதை மத்திய கிழக்கு பகுதியில் பிரபலமாக உள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த 2023-ல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஜூலை 22, 2025 வரையில் இந்த மோதலில் சுமார் 59,106 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில்தான் காசாவில் பட்டினி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நஸர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

உதவி மையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காசாவில் களப்பணியில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். காசாவுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் பிரத்யேக சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தாரில் ‘இஸ்ரேல் - ஹமாஸ்’ இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மோதல் காரணமாக அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் உதவி முகாம்களை மக்கள் அணுக முயற்சிக்கும் போது அவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்படுகின்றனர். மொத்தத்தில் காசா பகுதி பூலோக நரகமாக மனிதர்களுக்கு மாறியுள்ளது.

இந்நிலையில், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவின் இயக்குனர் முகமது அபு சால்மியா, "காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 72 மணி நேரத்தில் 21 குழந்தைகள் இறந்துள்ளனர்” என தெரிவித்தார். காசாவில் உள்ள உலக சுகாதார மையத்தின் அமைப்புகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

வெடிகுண்டு சப்தம், குண்டுவெடிப்பு, நெருப்பு, புழுதி, புகை, தாக்குதலில் அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் மனித உடல்களின் பாகங்களுக்கு மத்தியில்தான் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாக காசாவில் முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் தங்களது வாழ்க்கை சூழலை பகிர்ந்துள்ளனர். மக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், வசித்து வரும் கூடாரங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். "பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான்” என கடந்த 2021-ல் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருந்தார். இப்போது அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. வேறு எந்த மாற்றமும் அங்கு ஏற்படவில்லை.


மக்கள் கருத்து

கடவுள் வேடிக்கை பார்க்கிறார்Jul 23, 2025 - 05:28:48 PM | Posted IP 172.7*****

இஸ்ரேல் மக்கள் மீது 100000 ராக்கெட்களை ஏவ காசு இருக்கு ஆனால் திங்க காசு இல்லையாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory