» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ஆகஸ்ட் 24 வரை தடை நீட்டிப்பு

சனி 19, ஜூலை 2025 12:18:52 PM (IST)

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் 24-ம்தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ம்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. இதற்கிடையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

இதனிடையே இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை ஏப்ரல் 23-ம்தேதி இந்தியா மூடியது. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதம் வரையே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும். பின்னர் இந்த தடை ஜூன் 24-ம்தேதி வரையும், தொடர்ந்து ஜூலை 24-ம்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது.

அதேபோல பாகிஸ்தான் அரசும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத வகையில், ஜூலை 24-ம்தேதி வரை அதன் வான்வெளியை மூடி உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் மாதம் 24-ம்தேதி வரை நீட்டித்துள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3:50 மணிக்கு அமலுக்கு வந்த விமான வீரர்களுக்கான அறிவிப்பின்படி (NOTAM), இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் எந்த விமானமோ, அல்லது இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட ராணுவம் மற்றும் சிவில் விமானங்களோ பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை ஆகஸ்ட் 24 காலை 5:19 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory