» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குற்றவாளியை போல கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் : அமெரிக்கா விளக்கம்!

புதன் 11, ஜூன் 2025 11:41:53 AM (IST)



உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர், சட்டவிரோதமாக நுழைந்திருப்பதாக கூறி, குற்றவாளியை போல கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 6ம் தேதி பிரபல தொழிலதிபர் குணால் ஜெயின், தனது x தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், நியூ ஜெர்சியின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவரை, அந்நாட்டு போலீசார் குற்றவாளியை போல கைது செய்ததாகவும், மாணவர் கண்ணீர் விட்டு அழுதும் கூட, அதிகாரிகள் இரக்கம்காட்டாமல், ஆயுதமேந்திய குற்றவாளியை கைது செய்வதை போல மாணவரை தாக்கினார்கள் என்றும் கூறியிருந்தார்.

மாணவர்கள் காலையில் விசா பெற்று விமானத்தில் ஏறுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்களால் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளிடம் தங்கள் வருகைக்கான காரணத்தை விளக்க முடியாமல் போகிறது. இதனால் அவர்கள் மாலையில் குற்றவாளிகளைப் போல் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் 3-4 சம்பவங்கள் இதுபோன்று நடக்கின்றன. கடந்த சில நாட்களாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.

இது இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளை தூண்டியது. அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பலரும் சோஷியல் மீடியாக்களில் கேள்விகளை எழுப்பியிருந்தனர். எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா சில கருத்துக்களை தெரிவித்திருந்தது. ஆனால், அவை பதிலளிக்கும் தொனியில் இல்லாமல், அதிகாரத் தொனியில் இருந்திருக்கிறது. 

அதாவது, "முறையான அனுமதியை பெற்று அமெரிக்காவுக்குள் வருபவர்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டவிரோதமாக நுழைவது, விசா விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. முறையற்ற வழிகளில் அமெரிக்காவுக்கு வருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சட்டத்தை மீறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் கேள்வி என்னவெனில், விசா இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது. விமானங்களில் ஏறுவதற்கு விசா தேவை. அப்படியெனில் தற்போது கைது செய்யப்பட்ட மாணவர், உரிய விசாவுடன்தான் அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்க முடியும். அப்புறம் ஏன் காவல்துறை அவரை கைது செய்தது? என்று பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

மறுபுறம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறது. சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை, போர் கைதிகளை போல கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

நாமJun 11, 2025 - 01:30:01 PM | Posted IP 104.2*****

அமெரிக்காவுக்கு எதுக்கு போனும் ? துட்டு பிச்சை எடுக்கவா? பணம் கொழுத்த மனிதர்கள் தான் அங்கு வாழ்வார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory