» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: மெழுகுவர்த்தி ஏற்றி அதிபர் புதின் அஞ்சலி!

திங்கள் 25, மார்ச் 2024 10:54:14 AM (IST)

ரஷ்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புறநகர் பகுதியில் அரங்கு ஒன்றில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென 4 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்து உள்ளது.

அவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 182 பேர் காயமடைந்தனர். 100 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ரஷியாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனால், அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று ஒரு நாள் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தன. இதேபோன்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதின் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றினார்.

இந்த தாக்குதல் பற்றி புதின் கூறும்போது, தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பியோட முயற்சித்தனர் என்று கூறினார். எனினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் 2 பேருக்கு எதிராக மாஸ்கோவில் உள்ள கோர்ட்டு ஒன்றில் குற்றச்சாட்டு பதிவானது. இதில், தலேர்த்ஜான் பரோதேவிச் மிர்ஜோயேவ் மற்றும் சைதக்ரமி முரோதலி ரசாபலிஜுடா ஆகிய 2 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.

இதில், மிர்ஜோயெவ் என்ற தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்பு கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், மே 22ஆம் தேதி வரை அவரை விசாரணைக்கு முந்தின காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory