» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்: மாலத்தீவு அதிபா் மூயிஸ் வேண்டுகோள்

சனி 23, மார்ச் 2024 12:06:26 PM (IST)

மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் மூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் சுமாா் 90 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். 

இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு கடந்த சில நாள்களுக்கு முன்னா் தாயகம் திரும்பியது. நிகழாண்டு மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலத்தீவு ஊடகத்துக்கு அதிபா் மூயிஸ் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்திய வீரா்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்தியா மட்டுமின்றி வேறு எந்தவொரு நாட்டின் ராணுவம் மாலத்தீவில் இருந்திருந்தாலும், இதைத்தான் எனது அரசு செய்திருக்கும். இதில் வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. இந்திய வீரா்கள் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மாலத்தீவின் முன்னாள் அதிபா் அப்துல்லா யாமீனின் நிா்வாகமும் கோரியது. 

ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. நெருங்கிய கூட்டாளியாக இந்தியா நீடிக்கும்: மாலத்தீவுக்கு உதவிகள் வழங்குவதில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. மாலத்தீவில் ஏராளமான திட்டங்களை இந்திய அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும். இந்தியாவிடம் மாலத்தீவு கடன் பெற்றுள்ள நிலையில், அந்தக் கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது. 

எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும். இதை இந்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன். மாலத்தீவின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறேன் என்றாா்.

ரூ.3,348 கோடி கடன்: கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, சுமாா் 400.9 மில்லியன் டாலா்களை (ரூ.3,348 கோடி) இந்தியாவுக்குக் கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory