» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டி.வி. நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல்: ஈகுவடாரில் பதற்றம்

வியாழன் 11, ஜனவரி 2024 8:31:07 AM (IST)

ஈகுவடாரில் டி.வி. நேரலையின்போது ஆயுதங்களுடன் போதை கும்பல் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியது. 

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் ஆயுதங்கள், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக கடத்துவது அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் கும்பல் தலைவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர்.

இதன் எதிரொலியாக நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆயுதம் ஏந்திய கும்பல் கலவரத்தில் ஈடுபட தொடங்கின. போலீசாரின் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவை தீவைத்து கொளுத்தப்பட்டன. தடுக்க முயன்ற போலீசார் கடத்தி சிறை பிடிக்கப்பட்டனர்.

நாட்டின் தற்போதைய நிலையை காரணம்காட்டி சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களின் தூதரங்கங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. மேலும் ஈகுவடாரில் உள்ள தனது நாட்டுமக்களை உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது. பெரு உள்ளிட்ட அண்டை நாடுகள் ஈகுவடார் உடனான சர்வதேச எல்லைகளை மூடுவதாக அறிவித்தது.

இந்த கலவரத்தில் கடந்த 2 நாட்களில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் உள்ளிட்ட 50 பேர் தப்பித்தனர். இதனால் அமைதியை நிலைநாட்ட 60 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தி அதிபர் டேனியல் நோபாவா அறிவித்தார்.

இந்தநிலையில் குவாயாகில் நகரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலக கட்டிடத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று அதிரடியாக உள்ளே நுழைந்தது. டி.வி. நேரலை ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது புகுந்த அந்த கும்பல் தொலைக்காட்சி ஊழியர்களை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் துப்பாக்கி முனையில் ஊழியர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் டி.வி. நேரலையின்போது தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் புகுந்த 13 பேரை கைது செய்தனர். பின்னர் பிணைக் கைதிகளாக இருந்த ஊழியர்களை மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory