» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்: பதற்றம், வன்முறையுடன் நடந்து முடிந்தது!

திங்கள் 8, ஜனவரி 2024 8:25:12 AM (IST)

வன்முறைக்கு மத்தியில் வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

அண்டை நாடான வங்கதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கு பின்னர் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் 436 சுயேச்சை வேட்பாளர் உள்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று 4-வது முறையாக ஆட்சி அமைப்பார் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

எனவே தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.

இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் என சுமார் 7½ லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். டாக்கா நகர கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை செலுத்தினார்.இதற்கிடையே நரசிங்கி மற்றும் நாராயண்கஞ்ச் பகுதியில் தேர்தல் மோசடி நடைபெற்றதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இதனால் அங்குள்ள 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

மேலும் தேர்தல் மோசடி தொடர்பாக தொழில்துறை மந்திரி நூருல் மஜித் மஹ்மூத் ஹூமாயூனின் மகனை கைது செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என வங்கதேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory