» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் போட்டியிட மேலும் ஒரு மாநிலத்தில் தடை!

வெள்ளி 29, டிசம்பர் 2023 5:33:45 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் கொலராடோவைத் தொடர்ந்து மைனே மாநிலத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாநில கோர்ட்டு டிரம்பை தகுதிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. கொலராடோவைத் தொடர்ந்து மைனே மாநிலத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மைனே வெளியுறவுத்துறை மந்திரி ஷென்னா பெல்லோஸ் கூறும்போது, "குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாநிலத்தில் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.  அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. நாடாளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன" என்றார். 

டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதை நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய உள்ள நிலையில், மைனே மாநிலம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது பிரச்சார பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory