» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா நோக்கி வந்த மேலும் ஒரு சரக்கு கப்பல் மீது ‘டிரோன்’ தாக்குதல்!

திங்கள் 25, டிசம்பர் 2023 10:20:59 AM (IST)

இந்தியா நோக்கி வந்த மேலும் ஒரு சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அதன்படி செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுக்கு சொந்தமான மற்றும் அந்த நாட்டுடன் வர்த்தக தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்

இந்த சூழலில் இந்திய கடல் எல்லையில் அரபிக் கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது நேற்று முன்தினம் ‘டிரோன்’ மூலம் தாக்கப்பட்டது. போர் தொடங்கியதற்கு பிறகு செங்கடலுக்கு வெளியே சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இது முதல்முறையாகும். சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு 21 இந்தியர்களுடன் இந்தியாவின் மங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதை தொடர்ந்து, உதவிக்காக இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தாக்குதலுக்கு ஆளான கப்பல் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதில் உள்ள மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்தது. இந்த நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியா நோக்கி வந்த மற்றொரு சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தகவலை அமெரிக்க கடற்படை தெரிவித்தது. இது தொடர்பாக அமெரிக்க கடற்படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டிச. 23-ந் தேதி இரவு செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த 2 சரக்கு கப்பல்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதில் நார்வேக்கு சொந்தமான கப்பல் தாக்குதலில் இருந்து தப்பியது. இந்தியக் கொடியுடன் கூடிய எம்.வி. சாய்பாபா கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என கூறப்பட்டது.

இந்தியா நோக்கி வந்த எம்.வி. சாய்பாபா கப்பலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை இந்திய கடற்படை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அதே சமயம் தாக்குதலுக்கு உள்ளான அந்த கப்பல் இந்திய கொடியுடன் சென்றது என்ற அமெரிக்க கடற்படையின் கூற்றை இந்திய கடற்படை மறுத்துள்ளது.

இதுப்பற்றி கடற்படை அதிகாரிகள் கூறுகையில், "இந்த கப்பல் மத்திய ஆப்ரிக்க நாடான காபோனுக்கு சொந்தமானது. இந்திய கப்பல் பதிவேட்டில் இருந்து சான்றிதழை பெற்றுள்ளது. கப்பலில் 25 இந்தியர்கள் உள்ளனர். தாக்குதலில் அவர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory