» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர் நிறுத்தம் முடிந்ததால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: 180 பேர் பலி!

சனி 2, டிசம்பர் 2023 11:54:47 AM (IST)



போர் நிறுத்தம் முடிந்ததால் காசா மீது போர் விமானங்கள் குண்டுகளை வீசி இஸ்ரேல் போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. 

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தியதில் 14,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டாகின. 

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவாார்த்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் நிறுத்தம் 7 நாட்கள் நீடித்தது. இதில் 83 இஸ்ரேல் பிணைக் கைதிகள், 24 வெளிநாட்டினரை ஹமாஸ் விடுத்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கத்தார் நாடு முயற்சித்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தனது போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. தெற்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

அதே போல காசாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வீச்சால் பல இடங்களில் கடும் புகை எழும்பின. காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் நாள் தாக்குதலில் 180 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

இது தொடர்பாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, நேற்று காலை இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 180-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 589 பேர் காயம் அடைந்துள்ளனர்.காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா மக்கள் உயிரை கையில் பிடித்தப்படி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் 126 இஸ்ரேலியர்கள், தாய்லாந்தை சேர்ந்த 8 பேர், நோபளம், தான்சானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 137 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory