» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை

வியாழன் 31, அக்டோபர் 2024 9:28:15 AM (IST)

முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்து உள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வை சுமார் 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முைறகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது.

அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், 1,500-க்கு மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சக தேர்வர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப்போல ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததும் அம்பலமானது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு பெரும் மோசடி அரங்கேறிய இந்த தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மாணவ-மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீட் தேர்வின் புனிதம் கெட்டு விட்டதாக தெரிவித்தது. எனினும் இந்த முைறகேடுகள் நாடு தழுவிய அளவில் நடந்ததற்கான ஆதாரம் இல்லை எனக்கூறி, தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதற்கிடையே நெட் நுழைவுத்தேர்விலும் மோசடிகள் அரங்கேறியது உறுதியானது. எனவே அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.

மேலும் ஜூன் 23-ந்தேதி நடத்த இருந்த உயர்நிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வை கடைசி நேரத்தில் ரத்து செய்த மத்திய அரசு, பின்னர் புதிய அட்டவணைப்படி நடத்தியது. நுழைவுத்தேர்வுகளில் அதிக அளவில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ அமைப்புகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

இவ்வாறு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முறைகேடுகளும், மாணவர்கள் மற்றும் கட்சியினரின் போராட்டங்களும் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே இந்த மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், நுழைவுத்தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றையும் அமைத்தது.

இந்த குழுவினர் 22 கூட்டங்களை நடத்தி, நுழைவுத்தேர்வுகளை திறம்பட நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அத்துடன் தேர்வுகளுக்காக தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளை கோரிய இந்த குழுவினர், அது தொடர்பாக பெறப்பட்ட 37,000 பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை அவர்கள் தயார் செய்துள்ளனர். இதில் நீட் தேர்வு மட்டுமின்றி மத்திய அரசு நடத்தும் அனைத்து நுழைவுத்தேர்வுகளின் புனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: நுழைவுத்தேர்வின் புனிதத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் அறிக்கையில் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு மற்றும் நாட்டில் முக்கிய நுழைவுத் தேர்வுகளை திறம்பட நடத்துவது தொடர்பாக பல பரிந்துரைகள் இடம்பெற்று உள்ளன.

அவற்றில் முக்கியமாக, நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை பேப்பர்-பேனா (எழுத்துத்தேர்வு) முறையில் நடத்துவதை குறைத்து, ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். ஆன்லைன் மூலம் நடத்த முற்றிலும் சாத்தியமற்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஆன்லைன் மற்றும் எழுத்துத்தேர்வு என இரு வழிகளிலும் நடத்தலாம்.

தேர்வின் புனிதத்தன்மை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் வெளி நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை பயன்படுத்துவதையும், வெளி நிறுவனங்களின் மையங்களை பயன்படுத்துவதையும் குறைக்க வேண்டும். நீட் தேர்வு உள்ளிட்ட முக்கியமான நுழைவுத்தேர்வில் ஒருவர் எத்தனை முறை பங்கேற்பது என்பதில் உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அதில் அடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கடந்த 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராதாகிருஷ்ணன் கமிட்டி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory