» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

4 வயது மகனை கொடூரமாக கொன்ற பெண் தொழில் அதிபர்: பரபரப்பு தகவல்கள்!

புதன் 10, ஜனவரி 2024 12:19:38 PM (IST)

பெங்களூருவில்  கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில் 4 வயது மகனை பெண் தொழில் அதிபர் ஒருவர் கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ரெசிடன்சி சாலை பகுதியில் வசித்து வருபவர் சுசனா சேத் (39). இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் வெங்கடரமணா. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுசனா சேத்தும் என்ஜினீயர். அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சின்மய் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 4 வயது ஆகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். வெங்கடரமணா பிலிப்பைன்சில் வேலை செய்து வந்தார். மேலும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுவன் சின்மய்யிடம் வெங்கடரமணா பேச கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. இதனால் அவர் ஞாற்றுக்கிழமை அன்று தனது மகனுடன் செல்போன் வீடியோ அழைப்பில் பேசி வந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு ரெசிடன்சி சாலையில் உள்ள கோபால கிருஷ்ணா வணிக வளாகத்தின் முதல் தளத்தில் ‘மைண்ட் புல் கம்பெனி’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை சுசனா சேத் தொடங்கினார். அதன் முதன்மை செயல் அதிகாரியாகவும் சுசனா சேத் செயல்பட்டு வந்தார். வசதி படைத்த சுசனா சேத் அடிக்கடி தனது விமானத்தில் மகனுடன் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதுபோல் கடந்த 6-ந் தேதி அன்று சுசனா சேத், தனது மகனுடன் கோவா மாநிலத்துக்கு சென்றார்.

அங்கு வடக்கு கோவா பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அவர் அறை எடுத்து தங்கினார். கடந்த 8-ந் தேதி அவர் தனக்கு பெங்களூரு செல்ல வாடகை காரை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு கேட்டுள்ளார். அதன்பேரில் ஓட்டல் ஊழியர்களும் சுசனா சேத்துக்கு வாடகை காரை ஏற்படுத்தி தந்துள்ளனர். பின்னர் அவர் தனது அறையில் இருந்து வரும்போது ஒரு பெரிய ‘சூட்கேஸ்’ பெட்டியை கொண்டு வந்துள்ளார். அவருடன் அவரது மகன் இல்லை.

இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கேட்டபோது தனது உறவினர் ஒருவருடன் அவன் சென்றுவிட்டதாக மழுப்பலாக பதில் கூறியுள்ளார். சுசனா சேத் வாடகை காரில் ஏறி புறப்பட்டு சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை ஓட்டல் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அறையில் சில இடங்களில் ரத்தக்கறைகள் இருந்துள்ளன. மேலும் ரத்த நெடியும், துர்நாற்றமும் வீசி உள்ளது.

இதனால் பதற்றம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இதுபற்றி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி கோவா போலீசாரிடம் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், சுசனா சேத் பயணித்த கார் டிரைவரை ரகசியமாக தொடர்பு கொண்டு உடனடியாக காரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அதற்குள் அந்த கார் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் அருகே ஐமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின்பேரில் அந்த கார் டிரைவர், உடனடியாக காரை ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்றார். மேலும் அவர் போலீசாரிடம் நடந்தவற்றை தெரிவித்தார். இதற்கிடையே, ஐமங்களா போலீசாரை தொடர்பு கொண்டு கோவா போலீசாரும் பேசி இருந்தனர். அதன்பேரில் அந்த காரின் டிக்கியில் இருந்த சுசனா சேத்தின் சூட்கேசை கைப்பற்றி அதில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சூட்கேஸ் பெட்டியில் சுசனா சேத்தின் மகனின் உடல் இருந்தது. அதைப்பார்த்த போலீசார் பதறிப்போயினர். சுசனா சேத்தின் மகனை கொடூரமாக தாக்கி கொலை செய்து உடலை சிறுவன் அணியும் துணிகளுடன் சேர்த்து பொதிந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது மகனை கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கி கொலை செய்ததை சுசனா சேத் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

அதையடுத்து போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர். பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்ரதுர்கா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது கணவர் வெங்கடரமணாவுடன், தன்னுடைய மகன் வீடியோ அழைப்பில் பேசுவது சுசனா சேத்துக்கு பிடிக்காமல் இருந்துள்ளது, எங்கு தனது கணவர் தன்னிடம் இருந்து மகனை பிரித்து சென்று விடுவாரோ என்று சுசனா சேத் பயத்தில் இருந்துள்ளார்.

மேலும் அவர் தனது கணவர் வெங்கடரமணா மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் தனது கணவரை பழிவாங்க எண்ணி மகனை கொலை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல தொழில் அதிபரான சுசனா சேத் தான் பெற்ற மகனையே கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory