» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

திமுக ஆட்சியில் வட மாநிலத்தவர்களுக்கும் மகளிருக்கான ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடியானது ரிசர்வ் வங்கியின் புதிய அறிவுறுத்தல்களின்படியே செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆட்சிக்காலங்களைப் போலன்றி தற்போது இதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்றும் நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் மரியவில்சன் கூறியதாவது: "திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வெள்ளை அறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்படும். இதில் பல்வேறு முக்கிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

தற்போது அனைத்துத் துறைகளிலும் தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, தணிக்கை அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்கள் எங்களிடம் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். அதில், கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்கான ரூ. 1,000 உரிமைத்தொகை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, வடமாநிலத்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் எங்களிடம் ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியுள்ளனர். 

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரவிருக்கும் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (Revised Budget) மகளிர் உரிமைத்தொகை குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும்."

"கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக அரசு விவசாயக் கடன் தள்ளுபடியை அவசரமாக அறிவித்துவிட்டுச் சென்றது. அதன் பின்னர் வந்த திமுக அரசு, அதனைப் பல்வேறு தவணைகளாகப் பிரித்து நடைமுறைப்படுத்தியது. கடந்த ஆட்சிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை.

ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ஒரு புதிய கடுமையான விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 45 நாட்களுக்குள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுக்குக் காலக்கெடு விதித்துள்ளனர். அந்த ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படியே தற்போது இந்த தள்ளுபடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவெகவில் அதிமுகவினர் இணைவது குறித்து: அதிமுகவினர் தவெகவில் இணைவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விடையளித்த அமைச்சர், "இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் தங்களுக்குப் பிடித்த எந்தக் கட்சியிலும் சேர்ந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் அதிமுகவினர் தவெகவில் இணைவதை ஒரு ஜனநாயக நகர்வாக நாம் வரவேற்க வேண்டும்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory