» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து : 13 பேருக்கு ரயில்வே விசாரணை குழு சம்மன்

புதன் 9, ஜூலை 2025 4:19:04 PM (IST)

கடலூா் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவத்தில் முதற்கட்டமாக 13பேர் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் அருகே தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம், சின்னகாட்டு சாகை ஆகிய கிராம பகுதிகளுக்கு மாணவர்களை ஏற்றி வர சென்றது. அந்த பள்ளி வேனை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர் (வயது 47) என்பவர் ஓட்டினார்.

அந்த வேனில் சின்னகாட்டு சாகையைச் சேர்ந்த திராவிடமணி மகள் 11-ம் வகுப்பு படித்து வரும் சாருமதி (16), 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி செழியன் (15), தொண்டமாநத்தம் விஜயசந்திர குமார் மகன் 10-ம் வகுப்பு படித்தும் வரும் விஸ்வேஷ் (15), 6-ம் வகுப்பு படித்து வரும் அவனது தம்பி நிமலேஷ் (12) ஆகிய 4 பேர் ஏறினர்.

பின்னர் அங்கிருந்து கடலூர் முதுநகர் பகுதியில் மாணவர்களை ஏற்றுவதற்காக வேன் அங்கிருந்து வந்து கொண்டிருந்தது. காலை 7.30 மணிக்கு செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே அந்த பள்ளி வேன் வந்தது. அங்கு ரயில்வே கேட் திறந்து இருந்தது. இதையடுத்து, எப்போதும்போல், சங்கர் வேனை முன்னோக்கி இயக்கி, ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார்.

அந்த சமயத்தில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் வந்தது. இதனால் வேன் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல், யோசிப்பதற்குள் மின்னல் வேகத்தில் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் ரயில் என்ஜினுடன் பல அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட வேன் சுக்குநூறாக உடைந்து பள்ளத்தில் விழுந்தது.

மேலும் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு வெளியில் இருந்த இரும்பு கம்பிகள் உடைந்தன. ரயில் தண்டவாளத்தில் இருந்த மின்கம்பம் ஒன்று உடைந்து பல அடி தூரத்தில் விழுந்தது. இந்த கோரவிபத்தில் பள்ளி வேனில் இருந்த மாணவி சாருமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் மற்றும் 3 மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர்.

இதை பார்த்த செம்மங்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவர் காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார். அப்போது தண்டவாளத்துக்கு மேல் சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த கடலூர் முதுநகர் போலீசார் காயம் அடைந்த மாணவர்கள் உள்பட 5 பேரை சிகிச்சைக்காகவும், பலியான மாணவி சாருமதி உடலை பிரேத பரிசோதனைக்காகவும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் நிமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் செழியன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. பள்ளி வேன் டிரைவர் உள்பட மற்ற 3 பேருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் ரயில் விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார். இதனிடையே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக தமிழகத்தை சேர்ந்த ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே விசாரணைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.

இதன்படி இந்த விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி டிரைவர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து அறியவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory