» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு

ஞாயிறு 1, அக்டோபர் 2023 4:58:07 PM (IST)

ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பயணிகள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால அட்டவணை வெளியிட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ரயில்கால அட்டவணையை ரயில்வே துறை சார்பாக வெளியிட்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கால அட்டவணையில் 11 புதிய ரயில்கள், 10 ரயில்கள் நீட்டிப்பு , இரண்டு ரயில்களின் சேவை அதிகரித்தல், மூன்று ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்குவது போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த அறிவிப்புகளில் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இது கன்னியாகுமரி மாவட்டத்தை வேண்டும் என்று புறக்கணிப்பதாக உள்ளது.கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிஜேபி ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்ட ரயில்கள்

1. தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு (2019)

2. நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்று முறை சூப்பர் பாஸ்ட் ரயில்(2019)

3. திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு (2017)

4. திருநெல்வேலி - காந்திதாம் ஹம்சாபர் வாராந்திர ரயில் நாகர்கோவில் டவுன் வழியாக (2018)

5. கன்னியாகுமரி - திப்ருகார் வாராந்திர ரயில் வாரத்துக்கு நான்கு நாள் ரயிலாக இயக்கம். 2023 (குமரி மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத பராமரிப்புக்கு என்று கொண்டுவரப்பட்ட ரயில்)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் நான்கு ரயில்கள் மட்டுமே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் இரண்டு ரயில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ஒரு நாள் முன்பாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த பாராளுமன்ற தேர்தல் இன்னும் எட்டு மாதத்தில் வர இருக்கிறது.

2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எந்த ஒரு புதிய ரயிலும் இயக்கப்படவில்லை. ஆனால் கேரளாவில் காங்கிரஸ் எம்.பிகள் ரயில்வே வாரியத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையீட்டு வற்புறுத்தி அவர்கள் தொகுதியில் பல்வேறு புதிய ரயில்களை பெற்றுள்ளார். இந்த கால அட்டவணையில் புதிய ரயில்கள் வந்துள்ளன.

சார்மினார் ரயில் நீட்டிப்பு:

சென்னை தாம்பரத்திலிருந்து ஐதராபாத் செல்லும் சார்மினார் ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே வைக்கப்பட்டு வருகின்றது. இந்த கோரிக்கையை அடுத்து தென்மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய திட்டம் தீட்டியது. ஆனால் இந்த திட்டம் பற்றி ரயில் கால அட்டவணையில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது கன்னியாகுமரி மாவட்ட பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் நீட்டிப்பு

திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு இயக்கப்படும் மூன்று இரவு நேர ரயில்களில் ஒரு ரயில் 16347-16348 ரயில் நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலிருந்து நடு இரவு நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஏரநாடு ரயில் திருவனந்தபுரத்துடன் நிரந்தரமாக ஜனவரி 1-ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட காரணத்தால் அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரம் - மங்களூர் 16347-16348 ரயில் குமரிக்கு கண்டிப்பாக நீட்டிப்பு செய்யப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு குமரி மாவட்ட பயணிகளிடம் அதிக அளவில் ஏற்பட்டது. ஆனால் இந்த ரயில் நீட்டிப்பு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் ரயில் கால அட்டவணையில் அறிவிக்காதது குமரி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் ரயில்

நாகர்கோவிலிருந்து தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலிருந்து சென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து இயங்கிவருகின்றது. ஒரே நாளில் ஐந்து சிறப்பு ரயில்கள் சென்ற நாட்களும் உண்டு. அந்த அளவிற்கு கூட்டம் சென்னை – நாகர்கோவில் மார்க்கத்தில் அலை மோதுகின்றது.  இந்த நாகர்கோவில் - தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே துறை கண்டுகொள்ளவே இல்லை.

காசி தமிழ் சங்கமம் ரயில்

கடந்த ஆண்டு காசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது கன்னியாகுமரியிலிருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் புதிய ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் அறிவிப்புக்கு பிறகு வரும் முதல் ரயில்  கால அட்டவணையில் இது என்பதால் அதற்கான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான ரயில்வே கால அட்டவணையில் இது பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது காசிக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் ஏமாற்றமாக உள்ளது. ரயில்வே அமைச்சரின் அறிவிப்பு கூட ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இன் இந்த ரயில் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முனைய இடநெருக்கடி

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலிருந்து புதிய ரயில்களை இயக்க முனைய வசதிகள் இடநெருக்கடியை உள்ளது. இதனால் புதிய ரயில்களை குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக இயக்க முடியாது என்று ரயில்வே துறை கூறி வருகிறது. இவ்வாறு இருந்தால் ரயில் அறிவிப்பு ரயில் கால அட்டவணையில் அறிவித்துவிட்டு பின்னர் முனைய விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கலாம். இவ்வாறு ரயில் கால அட்டவணையில் பல்வேறு ரயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடியை போக்கும் விதமாக ஒரு சில ரயில்கள் மாற்றம் செய்து அல்லது நீட்டித்து இயக்கினால் இடநெருக்கடி வெகுவாக குறையும். அதற்கு கூட ரயில்வே அதிகாரிகள் தயாராக இல்லை.

பயணிகள் ரயில்கள் நீட்டிப்பு

திருநெல்வேலியிருந்து காலையில் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருவனந்தபுரம் வரையிலும் திருவனந்தபுரத்திலிருந்து காலையில் புறப்படும் ரயிலை திருநெல்வேலி வரையிலும் நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இந்த இரண்டு ரயில்களையும் நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் சந்திப்பு இடநெருக்கடி குறையும். ஆனால் இந்த கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை

நேத்ராவதி ரயில் நீட்டிப்பு:

கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த ரயிலை ரயில்வே துறை புனேயுடன் நிறுத்திவிட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து விட்டு தற்போது இயங்கும் கன்னியாகுமரி – புனே ரயிலை கொச்சுவேலி உடன் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. ஒரு ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக வேறு ரயிலாக நேத்ராவதி ரயில் நீட்டிப்பு செய்யப்பட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு இடநெருக்கடி பிரச்சனையோ கன்னியாகுமரி –திருவனந்தபுரம் இருப்புப்பாதை நெருக்கடி பிரச்சனையா வரபோவது இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க ரயில் கால அட்டவணையில் இதுபற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

மதுரை- புனலூர் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு

வேளாங்கண்ணி கோவிலுக்கு திருவனந்தபுரம் கொல்லம், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அதிகப்படியான மக்கள் வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க தினசரி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தற்போது இயங்கிவரும் மதுரை – புனலூர் ரயிலை நாகர்கோவில் டவுண் வழியாக வழித்தடத்தை மாற்றி திருச்சி, தஞ்சாவூர், வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்ய இயக்க கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இந்த ரயிலை நீட்டிப்பு செய்தால் சந்திப்பு ரயில்  நிலையத்தில் உள்ள நடைமேடை இடநெருக்கடி குறையும். இன்னும் எட்டு மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்குள் அதிலிருந்து ஒரு சில ரயில்கள் ஆவது வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory