» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உப்பள நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: நெல்லை முபாரக் வலியுறுத்தல்!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:28:38 AM (IST)

SaltMeeting.jpg

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் நெல்லை முபாரக் கூறியது: "கடந்த 1937-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு, நமது முன்னோர்கள் தங்கள் சொந்த செலவிலும் உடலுழைப்பாலும் சீரமைத்த நிலங்கள் இவை. 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை தலைமுறையாக வாழ்வாதாரமாக இருக்கும் இந்த நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது பேரநீதியாகும்."

நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி முடங்கும். இதனால் தமிழகம் தனது அத்தியாவசிய உப்புத் தேவைக்குக் குஜராத்திடம் கையேந்தும் நிலை உருவாகும்.

உப்பு உற்பத்தியை நம்பியுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். மேலும், மழைக்கால வடிகாலாகப் பயன்படும் மதிகெட்டான் ஓடைப் பகுதியும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

உப்பளங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் முதல் ₹70 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஏக்கருக்கு ஆண்டுக்கு ₹5,000 வீதம் நியாயமான குத்தகைத் தொகையைச் செலுத்த உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். அதை ஏற்று, நீண்டகாலக் குத்தகை உரிமையை வழங்கி உற்பத்தியைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், பால்ராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி பைஜி, செயலாளர் முகம்மது உமர், SDTU மாவட்ட தலைவர் குலசை தாஹிர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory