» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவா்கள் சிறைபிடித்த 6 படகுகள் விடுவிப்பு

திங்கள் 25, மார்ச் 2024 7:53:00 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சிறைபிடித்து வைத்திருந்த குமரி, கேரளத்தைச் சேர்ந்த 6 படகுகளும் விடுவிக்கப்பட்டன.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சிறைபிடித்து வைத்திருந்த 6 படகுகளும் விடுவிக்கப்பட்டன. தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்; கேரள விசைப்படகு மீனவா்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என வலியுறுத்தி, கடந்த 19ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

இந்நிலையில், தங்கள் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகுகள் 5, கேரள விசைப்படகு 1 ஆகியவற்றையும், அதில் இருந்த மீனவா்கள் 85 பேரையும் தூத்துக்குடி மீனவா்கள் சிறைபிடித்தனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பின் 85 மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், 6 படகுகளை விடுவிக்க மறுப்பு தெரிவித்து, தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவா்கள் ஈடுபட்டு வந்தனா். 

இந்நிலையில், நேற்று காலையில் விசைப்படகு உரிமையாளா் போஸ்கோவை காவல்துறையினா் பிடித்துச் சென்றனா். இதனால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன் மீனவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனா்.  இத்தகவல் அறிந்த சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், சம்பவ இடத்திற்கு வந்து மீனவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். 

போலீசார் அழைத்துச் சென்ற போஸ்கோ விடுவிக்கப்படுவாா் என அவா் உறுதியளித்ததால் மீனவா்கள் மறியலை கைவிட்டனா்.  தொடா்ந்து, மீனவா்களுடனான பேச்சுவாா்த்தை மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அப்போது, தங்கு கடல் செல்ல அனுமதி வழங்குவது குறித்து தோ்தல் முடிந்த பின்னா் உரிய தீா்வு காணப்படும்; இதுகுறித்து மீனவளத் துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. 

இதையேற்று, சிறைபிடிக்கப்பட்ட 6 படகுகளையும் விடுவித்த மீனவா்கள், வேலைநிறுத்தத்தை கைவிடுவது குறித்து இன்று திங்கள்கிழமை முடிவு செய்யப்படும் என தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பலி

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:04:21 AM (IST)

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory