» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்: தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி!

வெள்ளி 10, மே 2024 3:15:19 PM (IST)

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. 

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் மே 7-ம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் அலுவலக பணியில் ஈடுபடக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். 

அவர் அரசு கோப்புகள் எதிலும் கையெழுத்திட மாட்டார் என அவரது வக்கீல் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதற்கு அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடைய 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை எல்லாம் ஜாமீனில் விடுவிக்க முடியுமா? ஒரு விவசாயிக்குகூட அறுவடை, விதை விதைப்பு போன்ற முக்கிய பணிகள் உள்ளன. விவசாயியைவிட அரசியல்வாதி மேலானவரா?” என கூடுதல் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, "இது அரசியல்வாதியின் வழக்கா, சாதாரண நபர் வழக்கா என்று நாங்கள் பார்ப்பது இல்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. விலக்குக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. தேர்தல் நடைபெறுவதால்தான் இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்று தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவிடம் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "அர்விந்த் கேஜ்ரிவால் ஜாமீன் மனு மீது மே 10-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” என்றார்.

அதன்பின்னர், அமலாக்கத் துறை சார்பில் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், கேஜ்ரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், "தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமையோ, அரசியல் சாசன உரிமையோ அல்லது சட்டப்படியான உரிமையோ அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.

நாட்டில் ஆண்டு முழுவதும் எங்காவது ஓர் இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டில் 124 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க முடியாது. இந்த தேர்தலில் கேஜ்ரிவால் போட்டியிடவும் இல்லை. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது” என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. 

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 25-ம் தேதி டெல்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory