» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி : சோனியா காந்தி

புதன் 12, ஏப்ரல் 2023 11:05:25 AM (IST)

"ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "ஜனநாயகத்தின் தூண்களை மத்திய அரசு திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேலை வாய்ப்பின்மை, பண வீக்கம், பிரிவினைவாதம், பட்ஜெட், அதானி குழும ஊழல் உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. 

இதை தடுக்க நாடாளுமன்ற கூட்டத் தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளை குறிவைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வுஅமைப்புகள் ஏவி விடப்படுகின்றன. எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும்பாஜகவுக்கு தாவும் நபர்கள் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீதுதேசிய பாதுகாப்பு சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளி மெகுல்சோக்சி மீதான நோட்டீஸை இன்டர்போல் வாபஸ் பெற்றிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று மத்திய சட்ட அமைச்சர் முத்திரை குத்துகிறார். ஊடகங்களின் குரல் வளையை நெரிக்க தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் எதுவுமே குறிப்பிடவில்லை. மத விழாக்களை பயன்படுத்தி கலவரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. அடுத்த சில மாதங்கள் ஜனநாயகத்துக்கு சோதனையான காலமாக இருக்கும். 

பல்வேறு மாநிலங்களில் நரேந்திர மோடி அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடும். நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் மன்றத்துக்கு காங்கிரஸ் கொண்டு செல்லும். இந்திய அரசமைப்பு, மக்களின் குரலை காக்க காங்கிரஸ் தொடர்ந்து போரிடும். பிரதான எதிர்க்கட்சி என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory