» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மத்திய அரசின் பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

வியாழன் 2, பிப்ரவரி 2023 11:28:13 AM (IST)

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில்  தமிழகத்துக்கு எவ்வித திட்ட அறிவிப்பும் இல்லை. இது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் செய்துள்ள மாற்றம், 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளைத் தொடங்குவது, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லா கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்கள்.

எனினும், தனிநபர் வருமான வரி மாற்றம் புதிய முறைக்கு மட்டுமே பொருந்தும் என்பது, ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும். இந்த மாற்றத்தை பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை 2 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. தேர்தல் நடைபெற உள்ளமாநிலங்களை மட்டும் குறிவைத்து, வளர்ச்சித் திட்டங்கள், நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கான மூலதனக் கடனுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது முழு பயனையும் தராது. இந்த திட்டத்தில், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது மிகவும் குறைவாகும். வீட்டுவசதித் திட்ட ஒதுக்கீடு ரூ.79,500 கோடியாக உயர்ந்தபோதும், வீட்டின் கட்டுமான விலையை அதிகரிக்காவிட்டால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு தனது பங்கை உயர்த்த வேண்டும்.

புதிய திட்டங்களுக்கான தனிநிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது. கரோனாவில் இருந்து நாடு மீண்டு வரும் சூழலில், மத்திய பட்ஜெட் மீது மக்களிடையே இருந்தபெரும் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. மொத்தத்தில் இது பாஜக ஆட்சியில் உள்ள, தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் ஆகும்.

வேலையில்லா திண்டாட்டம், விலை ஏற்றம், பணவீக்கத்தைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதி சுதந்திரத்துக்கு எவ்வித ஆக்கப்பூர்வ முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் மத்திய பட்ஜெட் வழக்கம்போல பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory