» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மது விற்பனையை நம்பி ஆட்சி செய்வது தான் திராவிட மாடலா?- அன்புமணி கேள்வி!!

வியாழன் 5, ஜனவரி 2023 11:55:44 AM (IST)

தமிழகத்தில் மது விற்பனை வருமானம் இல்லை என்றால் ஆட்சி செய்ய முடியாது என்பதுதான் திராவிட மாடலா? என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில், பா.ம.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கட்சித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பிறகு 2019-ம் ஆண்டு ஜப்பான் ஜைகா நிறுவன நிதி உதவியுடன் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை ஜைகா நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை. 

அதனால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும். மதுரையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே போட்டி நடக்கிறது. ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் பா.ம.க. போராட்டம் நடத்தியதால், அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார். 

தற்போது தி.மு.க. அரசிடமும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், தி.மு.க. அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திட கவர்னரிடம் அனுப்பப்பட்டும், அவர் ஏன் கையெழுத்திட மறுக்கிறார்? எனத்தெரியவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டம் நிறைவேற்றிய பின்பு 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தமிழக கவர்னரே பொறுப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் அந்த நிறுவனங்கள் தினமும் ரூ.200 கோடி சம்பாதிக்கின்றன.

தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது. மதுவால் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் கூட்டி, போதை பொருள் குறித்து கண்டிப்புடன் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மிக மிக முக்கிய பிரச்சினையான போதை பொருள் விவகாரம் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் அதிக மது விற்பனை தமிழகத்தில்தான் நடக்கிறது. 55 ஆண்டாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், மது விற்பனையை நம்பித்தான் ஆட்சி செய்கின்றன. மது விற்பனை வருமானம் இல்லை என்றால் ஆட்சி செய்ய முடியாது என்பதுதான் திராவிட மாடலா? என்பது தெரியவில்லை.

தி.மு.க. தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்குகிறார்கள். குறிப்பாக, நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, இதுபோன்று பல வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

2026-ல் சட்டமன்ற தேர்தலில், பா.ம.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு முன்பு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான வியூகங்களை எடுப்போம். கூட்டணி தொடர்பான முடிவுகள் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எடுப்போம். தமிழகத்தில் அதிகம் இளைஞர்கள் இருக்கும் கட்சி பா.ம.க.. அதிக அளவில் இளைஞர்கள் கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பரபரப்பு அரசியல் ஒருபுறமும், பிரிவினை அரசியல் ஒருபுறமும் இருக்கின்றன. நாங்கள் நடுவில் நாகரிகமான அரசியல் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

MANGOJan 6, 2023 - 03:48:36 PM | Posted IP 162.1*****

திராவிடத்தை பற்றி மிகவும் சரியான பதிவு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory