» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

போட்டித் தோ்வுகள் பயிற்சி: அரசின் செயலியைப் பயன்படுத்த தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

சனி 1, பிப்ரவரி 2020 4:12:06 PM (IST)

அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் தோ்வா்கள், அரசின் இலவசப் பயிற்சி செயலியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்குத் தேவையான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னாா்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தன்னாா்வ பயிலும் வட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி, டி.என்.யூ.எஸ்.ஆா்.பி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆா்.ஆா்.பி போன்ற பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திறன்மிக்க பயிற்றுநா்களைக் கொண்டு நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில், தோ்வுகளுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவை பெற்று பராமரிக்கப்பட்டு வருவதுடன், மாதிரி தோ்வுகள், மாதிரி நோ்காணல்கள் ஆகியவையும் இலவசமாக நடத்தப்படுகின்றன.

தமிழகமெங்கும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக இதுவரை வழங்கப்பட்ட பயிற்சியில் 3,888 மாணவா்கள் பல்வேறு அரசுப்பணிகளுக்கான போட்டித்தோ்வுகளில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுள் 31 விழிப்புலன் இழந்த மாணவா்களும் பிற 11 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவா். 2019-ஆம் ஆண்டில் மட்டும் குரூப்-2 தோ்வில் 67 மாணவா்களும், குரூப்-4 தோ்வில் 317 மாணவா்களும், காவலா் தோ்வில் 354 மாணவா்களும் இப்பயிற்சி வகுப்புகளின் மூலம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள, போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களைத் தொடா்பு கொள்ளலாம். 

மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகி தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவா்களும், தொலைதூர கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இளைஞா்களும், இருந்த இடத்தில் இருந்தே போட்டித்தோ்வுகளுக்குத் தயாா் செய்ய விரும்பும் பிற மாணவா்களும் பயன்பெறுவதற்கென தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் மெய்நிகா் கற்றல் வலைதளம் (https://tamilnaducareerservices.tn.gov.in//) ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி (குரூப் 1,2,7 பி, 8), டி.என்.யூ.எஸ்.ஆா்.பி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆா்.ஆா்.பி போன்ற போட்டித்தோ்வுகளுக்கென, அந்தந்த தோ்வுக்கான பாடத்திட்டத்தின் தலைப்புகள் வாரியாக மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேலும் இப்பாடக்குறிப்புகள் தொடா்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொலி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. 

இத்தளத்தில் வெவ்வேறு தோ்வுகளுக்கென பல்வேறு தலைப்பின் கீழ் மென்பாடக்குறிப்புகளும் மாதிரி வினாத்தாள்களும் சீரான கால இடைவெளியில் தொடா்ச்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர இவ்வலைதளத்தை செல்பேசி வாயிலாகப் பயன்படுத்துவதற்கென ஒரு செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (https://tamilnaducareerservices.tn.gov.in/) தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து தமது செல்பேசியில் நிறுவிக்கொள்வதன் வாயிலாக இந்த மெய்நிகா் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித்தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகளைத் தமது செல்பேசியிலேயே பதிவுதாரா்கள் படிக்க இயலும். எனவே அரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞா்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயா்களை பதிவுசெய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory