» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

சுகப்பிரவசம் வரப்பிரசாதம் ஏன் ? : ஓர் அலசல்சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம் காட்டுகிறார்கள்.

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல பெண்களே சுகப்பிரசவத்தை விரும்பி, அதற்காக மெனக்கெட்டு, முயற்சியில் வெற்றியும் பெறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சாமானியப் பெண்களுக்கும் அது சாத்தியம்தானே? மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதமிடம் பேசினோம்… பிரசவம் என்பதே செத்துப் பிழைக்கிற சம்பவம்தான். அப்படியிருக்கையில் அதென்ன சுகப்பிரசவம்? தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை வெளியில் வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். இதில் மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியே தேவையிருக்காது. இந்த சுகப்பிரசவத்திலேயே இன்னொரு வகை உண்டு, அசிஸ்டெட் நார்மல் டெலிவரி எனப்படுகிற அதில், மருத்துவரின் உதவியோடு,கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் நிகழும்.

ஃபோர்செப்ஸ் முறையிலும், வாக்குவம் முறையிலும் நிகழ்கிற சுகப்பிரசவங்கள் இந்த ரகம் ஃபோர்செப்ஸ் என்பது, குழந்தையின் தலையின் இரண்டு பக்கங்களிலும் ராடு போன்ற ஒரு கருவியை வைத்து, குழந்தையை வெளியே இழுக்கும் முறை, இது குழந்தை, தாய் என இருவரையும் அதிகம் பாதிப்பதால், இப்போதெல்லாம் அவ்வளவாக செய்யப்படுவதில்லை, குழந்தையின் இதயத் துடிப்பு குறைந்தாலோ, தாயின் உடல் பலவீனமாக இருந்தாலோ ‘வாக்குவம்’ முறையில் பிரசவம் பார்க்கப்படும், குழாய் போன்ற ஒரு பகுதியைக் குழந்தையின் தலையில் பொருத்தி, ஒருவித அழுத்தம் உண்டாக்கி, குழந்தையை வெளியே எடுப்பது. நண்பன் படத்தில், இலியானாவின் அக்காவுக்கு விஜய் பிரசவம் பார்த்த காட்சி நினைவிருக்கிறதா? இது கிட்டத்தட்ட அப்படியானதுதான்!

சுகப்பிரசவத்திற்கு அனுமதிக்கபடாதவர்கள் :

ரொம்பவும் குள்ளமாக – அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டும் சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள், முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும். அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. அளவுக்கதிகம் குண்டாக இருந்தாலும் – அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் – சுகப்பிரசவம் நிகழும் வாய்ப்புகள் குறைவு.

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்னதான் காரணம்? சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நகர வாழ்க்கையில்,கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய் மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது… நடந்தால் ஆகாது… இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி இருக்கிறது,உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய ஆரம்பிக்கும். பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும்.

சிலருக்கு பிரசவ தேதி நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய் விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும். இதெல்லாமும் முக்கியம்… கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம்1கிலோ எடை கூட வேண்டும். இன்றைய பெண்களுக்கோ சர்வசாதாரணமாக 2 முதல் 3 கிலோ எடை எகிறுகிறது. மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். 15 – 20 எனத் தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 3வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம் (இந்த உடற்பயிற்சிகள் பற்றி https://www.facebook.com/tutyonline/photos/pcb.10153452822448726/10153452821728726/?type=1&theater சென்று தெரிந்துகொள்ளுங்கள். ).

உடம்புக்கு அசைவே கொடுக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் இன்றைய பெண்கள். குனியலாமா டாக்டர்? அதனால் ஒன்றும் ஆகாதே என்று கேட்கிற பெண்கள் தான் அதிகம். இடுப்பெலும்பு விரிய, உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டியது மிக முக்கியம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதற்கான பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு, தினம் அரை மணி நேரம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிச் செய்ததன் பலனாக, 4.5 கிலோ உள்ள குழந்தையைக் கூட, சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்கலாமாம்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலி, கால் வலியெல்லாம் வரும். அதில் எது நார்மல், எது பிரச்னைக்குரியது என்பதை மருத்துவரிடம் கேட்கலாம். வேலைக்குச் செல்கிற பெண்கள், எப்படி உட்கார்வது சரி எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இருக்கையில், முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம். ஒருக்களித்துதான் படுக்க வேண்டும். அப்படிப் படுக்கும்போதும், முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம். தினம் அரை மணி நேரம் மெதுவாக நடக்கலாம்.

முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா? இந்தச் சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக் கருவுற்றால், அதை வி பேக் ஆப்ஷன் என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.

தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி, குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் தொடர்புண்டா? வெண்ணெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நிகழுமா, பப்பாளி சாப்பிடலாமா? மாம்பழம் சாப்பிடலாமா என்கிற மாதிரியான கேள்விகள் பலருக்கும் உண்டு. உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.எந்த உணவையுமே அளவோடு எடுத்துக் கொள்கிறவரை பிரச்னையும் இல்லை!

உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மறக்காமல் பகிருங்கள் பாஸ்.....


மக்கள் கருத்து

csdgdfgMar 8, 2016 - 08:09:31 PM | Posted IP 125.2*****

என்னடா ஓகே லூசு பயலே

makkalDec 16, 2015 - 06:02:01 PM | Posted IP 122.1*****

newsok

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir Products

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory