» சினிமா » திரை விமர்சனம்

சமந்தாவின் "யுடர்ன்": யூகிக்க முடியாத த்ரில்லர்

வெள்ளி 21, செப்டம்பர் 2018 6:52:25 PM (IST)சமந்தா கதையின் நாயகியாக நடிக்க, ஆதி, பூமிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் யுடர்ன் படத்தின் விமர்சனம்: 

பத்திரிகை நிருபரான சமந்தா மேம்பாலம் ஒன்றில் நடக்கும் விபத்து குறித்து கதை எழுதும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த மேம்பாலத்தில் சாலைக்கு நடுவே இருக்கும் தடுப்பு கற்களை சில இருசக்கர வாகன ஓட்டிகள் அகற்றிவிட்டு விதிமுயை மீறி யுடர்ன் எடுத்துச் செல்கிறார்கள். அப்படி யுடர்ன் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டிகளை பேட்டி எடுக்க நினைக்கும் சமந்தா, அந்த சாலை ஓரத்தில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவரிடம், சாலை தடுப்பு கற்களை அகற்றும் நபர்களது இருசக்கர வண்டி எண்ணை குறித்து கொடுக்குமாறும், அதற்கு பணம் தருவதாகவும் கூற, அவரும் சமந்தாவுக்கு விதிமுறையை மீறி யுடர்ன் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வண்டி எண்ணை குறித்துக் கொடுக்கிறார். 

அதை வைத்து ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் அவர்களது விலாசத்தை பெறும் சமந்தா, அவர்களில் ஒருவரை பேட்டி எடுக்க அவரது வீட்டுக்கு செல்லும் போது, வீடு பூட்டப்பட்டு இருப்பதால் திரும்ப வந்துவிடுகிறார். ஆனால், அதே நாள் இரவு சமந்தா சந்திக்க சென்றவர் மர்மமான முறையில் இறக்க, போலீஸ் சமந்தா மீது சந்தேகப்படுகிறது. போலீஸ் சமந்தாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர, சமந்தாவோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவதோடு, தான் அந்த நபரை எதற்காக சந்தித்தேன், என்ற காரணத்தை கூறி, அவரைப் போல மேலும் பத்து பேருடைய விலாசமும் தன்னிடம் இருப்பதாக கூறி அதை போலீஸ் அதிகாரி ஆதியிடம் காண்பிக்கிறார். அந்த விலாசங்களை ஆதி ஆய்வு செய்ய, அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்ட தகவல் தெரிய வருகிறது. 

ஒட்டு மொத்த போலீஸ் டிப்பார்ட்மெண்டும் அதிர்ச்சியடைந்தாலும், மேலதிகாரி இந்த வழக்கை தொட வேண்டாம் என்று ஆதிக்கு உத்தரவுபோடுவதால் அவரால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இதற்கிடையே, மேம்பாலத்தில் மீண்டும் இரண்டு நபர்கள் சாலை தடுப்பு கற்களை அகற்றிவிட்டு விதிமுறையை மீறி யுடர்ன் எடுத்துச் செல்ல, அவர்களை காப்பாற்ற நினைக்கும் சமந்தா ஆதியிடம் உதவி கேட்க, அவரும் அந்த இரண்டு பேரை சிறையில் அடைத்து வைக்கிறார். ஆனால், அந்த இரண்டு பேரும் சிறைக்குள்ளயே இறந்து போக, ஆதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

என்னதான் நடந்தாலும், அந்த மேம்பாலத்தின் ரகசியத்தை அறிய வேண்டும் என்பதற்காக சமந்தாவே, மேம்பால சாலை தடுப்பு கற்களை அகற்றிவிட்டு விதிமுறையை மீறி யுடர்ன் எடுத்துச் செல்ல, அவர் மரணம் அடைந்தாரா அல்லது மேம்பாலத்தின் ரகசியத்தை கண்டுபிடித்தாரா என்பது தான் யுடர்ன் படத்தின் மீதிக்கதை. சாலை விதியை மீறி சிலர் செய்யும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படி ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் பவன்குமாருக்கு முதலில் சபாஷ் சொல்ல வெண்டும். படத்தின் ஆரம்பத்தில் நம்மை சீட் நுணியில் உட்காரை வைக்கும் இயக்குநர், படம் முடியும் வரை நம்மை அப்படி இப்படி என்று அசைய விடாமல் கட்டிப்போடும் அளவுக்கு திரைக்கதையை படு விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார்.

பத்திரிகை நிருபராக தோற்றத்தில் சற்று வித்தியாசத்தை காட்டியிருக்கும் சமந்தா, கொலை வழக்கில் சிக்கியதும் போலீசிடம் தான் குற்றவாளி அல்ல என்று கெஞ்சும் இடத்திலும், ராகுல் ரவீந்தரிடம் தனது காதலை மறைமுகமாக தெரிவிக்கும் இடத்திலும் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். மேம்பாலத்தில் விதிமுறையை மீறி யுடர்ன் எடுக்கும் இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் காட்சியில் பதற்றத்தை நடிப்பால் சிறப்பாகவே வெளிக்காட்டுகிறார். 

போலீஸ் அதிகாரியாக வரும் ஆதியும், அவரது நடிப்பும் எறும்புவை விட சுறுசுறுப்பாக இருப்பதோடு, திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்க்கிறது. சமந்தாவின் காதலராக நடித்திருக்கும் ராகுல் ரவீந்தரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சின்ன வேடம் என்றாலும் பூமிகாவின் வேடம் ரொம்பவே அழுத்தமானதாகவும், நம்மை அலற வைப்பதாகவும் இருக்கிறது. சமந்தா, ஆதி போன்ற முன்னணி நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும் எந்தவித காம்ப்ரமைஸும் செய்யாமல் இயக்குநர் பவன்குமார் திரைக்கதையை கையாண்ட விதம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் விறுப்பும் எதிர்ப்பார்ப்பும் படம் முடியும் வரை நீடிக்கிறது. இதற்கு காரணம்,திரைக்கதையில் இருக்கும் வேகம் காட்சிகளில் மட்டும் இன்றி, நடிகர்களின் நடிப்பிலும் இருப்பது தான். கொலை தொடர்பாக சமந்தாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தவுடன், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும் முறை, பிறகு சமந்தா கொடுக்கும் பத்து பேரது முகவரியை ஆதி ஆய்வு செய்யும் நடவடிக்கை அனைத்தும் எதார்த்தமாக இருப்பதோடு, தூங்குபவர்களையும் தட்டி எழுப்பும் வகையில் பரபரப்பாக இருக்க, யுடர்ன் எடுத்த இரண்டு நபர்களை காப்பாற்ற போலீஸ் அவர்களை சிறையில் தள்ள, அங்கேயே அந்த மர்மமான நிகழ்வு ஏற்படும் போது, போலீஸ் அவர்களை காப்பாற்ற முடியாமல் திணறும் காட்சி, படம் பார்ப்பவர்களை பரபரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

படத்தின் டைடில் கார்டிலேயே நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்யும் ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மிரெட்டி, அதன் பிறகு நமது கண்கள் திறையைவிட்டு அகலாமல் பார்த்துக்கொள்கிறார். படத்தில் பாடல்கள் இல்லை, அதன் தேவையும் இல்லாததால், இசையமைப்பாலர் பூர்ண சந்திர தேஜஸ்வி, பின்னணி இசை மூலமாகவும் திரைக்கதைக்கும், காட்சி அமைப்புக்கும் விறுவிறுப்பை கூட்டுகிறார். எடிட்டரின் பணியையும் பாராட்டியாக வேண்டும். 

த்ரில்லர் படமாக தொடங்கும் படம் ஒரு கட்டத்தில் வேறு ரூட்டில் பயணிக்கும் போது, ”அட..டே...இதை தான் சொல்ல போறிங்களா” என்று நமக்கு தோன்றினாலும், அதையே கொஞ்சம் புதுசாக, அதே சமயம் நம்பும்படியும் சொல்லியிருப்பது தான் இயக்குநரின் சாமர்த்தியம். இப்படி எல்லாம் நடக்குமா? நம்பவே முடியலையே, போன்ற லாஜிக் விஷயங்களை பார்க்காமல் ஒரு த்ரில்லர் படமாகவும், அதை கையாண்ட விதத்தையும் பார்த்தால், நிச்சயம் இயக்குநர் பவன்குமாருக்கு எழுந்து நின்று அப்ளாஷ் கொடுக்கலாம்.

சமந்தா என்ற கமர்ஷியல் நாயகி படத்தில் இருந்தாலும், அவரை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே கையாண்டிருக்கும் இயக்குநர் பவன்குமார், ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்ததோடு, எதிர்கால இயக்குநர்களுக்கு சாதாரண சம்பவத்தை எப்படி பரபரப்பான திரைக்கதையாக்குவது என்பதையும் இப்படத்தின் மூலம் கற்றுக்கொடுத்திருக்கிறார். படத்தின் முடிவு தெரிந்த பிறகும் கூட, யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டை வைக்கும் இயக்குநர், கிளைமாக்ஸிலும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, இந்த யுடர்ன் மூலம் ரசிகர்களுக்கு முழுமையான திகில் பயண அனுபவத்தை கொடுக்கிறார். மொத்தத்தில், யுடர்ன் என்ற இந்த சிறு பயணம், யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பான அதே சமயம் திகிலான பயணமாகவும் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory