» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

வியாழன் 5, மார்ச் 2026 10:59:50 AM (IST)


ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது. இப்போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசி நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் புதிய உலக சாதனை படைத்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் 10.2 ஓவர்களில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தவித்தது.

முக்கிய வீரர்களான குயிண்டன் டி காக் (10), கேப்டன் எய்டன் மார்க்ரம் (18), டேவிட் மில்லர் (6) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், 6-வது விக்கெட்டுக்கு இணைந்த மார்கோ யான்சன் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி அணியை மீட்டது. அதிரடியாக விளையாடிய மார்கோ யான்சன் 30 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 29 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, கோல் மெக்கோன்ஜி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 170 ரன்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த நியூஸிலாந்து அணிக்கு, தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 33 பந்துகளில் சதம் (100 ரன்கள்) விளாசி மிரட்டினார். இதில் 8 சிக்சர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.

மறுமுனையில் இவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய டிம் ஷெய்பர்ட் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவர்களிலேயே 117 ரன்கள் குவித்து வெற்றியின் பாதையை எளிதாக்கியது. இறுதியில் நியூஸிலாந்து அணி 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஃபின் ஆலன் படைத்த உலக சாதனை

இப்போட்டியில் 33 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகக்குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஃபின் ஆலன் படைத்தார். இதற்கு முன்னதாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை ஃபின் ஆலன் தற்போது முறியடித்துள்ளார்.

2-வது முறையாக இறுதிப் போட்டியில்... இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூஸிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory