» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு!

வியாழன் 13, மார்ச் 2025 8:04:21 PM (IST)



ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 76 ரன்கள் விளாசி ஹீரோவாக ஜொலித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா இரு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதி ஆட்டத்தில் சொதப்பிய விராட் கோலி 4-ல் இருந்து 5-வது இடத்துக்கு சரிந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 8-வது இடம் வகிக்கிறார். டாப்-10 வரிசையில் 4 இடங்களை இந்திய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்த ஒரு நாள் போட்டி ஆகஸ்டு மாதம் தான் (வங்காளதேசத்தில் நடக்கிறது) வருகிறது. அதனால் இந்திய வீரர்கள் அதே இடத்தில் நீடிப்பது கடினம். நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் எகிறி 14-வது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் ஒரு இடம் குறைந்து 16-வது இடம் வகிக்கிறார்.

குல்தீப் முன்னேற்றம்

பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்‌ஷனா முதலிடத்தில் தொடருகிறார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் கடைசி இரு ஆட்டத்தில் மொத்தம் 5 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து கேப்டனும், இடக்கை சுழற்பந்து வீச்சாளருமான மிட்செல் சான்ட்னெர் 6 இடங்கள் உயர்ந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் இரு விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 இடங்கள் அதிகரித்து 3-வது இடத்தை வசப்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய பவுலர் ரவீந்திர ஜடேஜா 13-ல் இருந்து 10-வது இடத்தை எட்டியுள்ளார்.

நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 18-வது இடத்திலும் (10 இடம் ஏற்றம்), இந்தியாவின் முகமது ஷமி 13-வது இடத்திலும் (2 இடம் பின்னடைவு), அக்‌ஷர் பட்டேல் 38-வது இடத்திலும் (இரு இடம் அதிகரிப்பு), வருண் சக்ரவர்த்தி 80-வது இடத்திலும் (16 இடம் முன்னேற்றம்) உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வருகிறார். ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் தாவி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 10-வது இடம் வகிக்கிறார்.

டாப்-10 பேட்ஸ்மேன்கள்

1 சுப்மன் கில் இந்தியா 784

2 பாபர் அசாம் பாகிஸ்தான் 770

3 ரோகித் சர்மா இந்தியா 756

4 ஹென்ரிச் கிளாசென் தென்ஆப்பிரிக்கா 744

5 விராட் கோலி இந்தியா 736

6 டேரில் மிட்செல் நியூசிலாந்து 721

7 ஹாரி டெக்டர் அயர்லாந்து 713

8 ஸ்ரேயாஸ் அய்யர் இந்தியா 704

9 சாரித் அசலங்கா இலங்கை 694

10 இப்ராகிம் ஜட்ரன் ஆப்கானிஸ்தான் 676

டாப்-10 பந்து வீச்சாளர்கள்

1 தீக்‌ஷனா இலங்கை 680

2 மிட்செல் சான்ட்னெர் நியூசிலாந்து 657

3 குல்தீப் யாதவ் இந்தியா 650

4 கேஷவ் மகராஜ் தென்ஆப்பிரிக்கா 648

5 பெர்னார்ட் ஸ்சோல்ட்ஸ் நமிபியா 646

6 மேட் ஹென்றி நியூசிலாந்து 642

7 ரஷித்கான் ஆப்கானிஸ்தான் 640

8 குடகேஷ் மோட்டி வெஸ்ட் இண்டீஸ் 632

9 ஷகீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் 619

10 ரவீந்திர ஜடேஜா இந்தியா 616

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக கில் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இருந்து சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். விருதுக்குரிய மாதத்தில் சுப்மன் கில் 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 சதம் உள்பட 406 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கில் இந்த விருதை பெறுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பரிலும் மாத விருதுக்கு தேர்வாகி இருந்தார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory