» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி : இந்தியா படைத்த சாதனைகள்
திங்கள் 13, நவம்பர் 2023 10:32:24 AM (IST)
நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஏற்கெனவே இந்திய அணி 8 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று (நவம்.12) பெங்களூரின் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி.இந்த உலகக் கோப்பைத் தொடரில் தான் ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதையடுத்து பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 124 ரன்களும், கே.எல்.ராகுல் 102 ரன்களும் எடுத்தனர்.நெதர்லாந்து அணியின் சார்பில் லீட் 2 விக்கெட்களையும், மெக்கரீன் மற்றும் மெர்வே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
411 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. 47.5 ஓவர்களில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து, 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் 9 லீக் ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய அணி 9 போட்டியிலும் வெற்றி பெற்று, தோல்வியே காணாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. வம்.15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி.
நெதர்லாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை புரிந்தனர்.
> சர்வதேச போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கி 14,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை.
> இந்தப் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் கடந்து 61 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித் சர்மா.
> அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்ஸர்களை பறக்கவிட்டு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். இவருக்கு அடுத்ததாக டி வில்லியர்ஸ் - 58 (2015), கெயில் - 56 (2019) ஆகியோர் உள்ளனர்.
> மேலும், நடப்பு தொடரில் 24 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். இவருக்கு அடுத்ததாக மோர்கன் (22 சிக்ஸ், 2019 உலகக் கோப்பை) உள்ளார்.
> நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில்.
> நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி! 594 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்ததாக டி காக் - 591 ரன்கள், ரச்சின் ரவீந்திர - 565 ரன்கள், ரோகித் - 503 ரன்கள் உள்ளனர்.
> இப்போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி உள்ளனர். அதேநேரம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது நிகழ்வு ஆகும். இதற்கு முன் (AUS vs IND, Jaipur, 2013 | AUS vs IND, Sydney, 2020) இரு தொடர்களிலும் நிகழ்ந்துள்ளது.
> இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் விளாசிய சதம், உலகக் கோப்பையில் அவரின் முதல் சதம் ஆகும்.
> மற்றொரு சதம் விளாசிய கேஎல் ராகுல், உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இன்றைய போட்டியில் 62 பந்துகளில் இந்த சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 63 பந்துகளில் ரோகித் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
> இன்றைய சிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக விராட் கோலி பந்துவீசினார். தான் வீசிய மூன்றாவது பந்திலேயே நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ரன்களில் வீழ்த்தினார் விராட் கோலி. 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது பந்துவீச்சில் விக்கெட் கைப்பற்றினார் விராட்.
> இதன்பின் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பந்துவீசினாலும் அவர்கள் யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை.
> விராட் கோலி போல் கேப்டன் ரோகித் சர்மாவும் இப்போட்டியில் பந்துவீசினார். ரோகித் ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த தேஜா நிடமானுரு, அவரின் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார்.
> இன்றைய போட்டியில் 9 பவுலர்களை பயன்படுத்தியது இந்திய அணி. இது உலகக் கோப்பை தொடரில் நடக்கும் 3வது நிகழ்வு.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










