» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

திங்கள் 30, அக்டோபர் 2023 9:48:40 AM (IST)



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. உலகக் கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை, இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோ நகரிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன்ஜாஸ் பட்லர், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ஷுப்மன் கில்லை ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணியினருக்கு அதிர்ச்சி அளித்தார் கிறிஸ் வோக்ஸ். ஷுப்மன் கில் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார்.

அதன் பின்னர் விளையாட வந்த விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். டேவிட் வில்லி வீசிய பந்தை அடிக்கமுயன்ற கோலி, பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து விளையாட வந்த ஸ்ரேயஸ் ஐயரும், விரைவிலேயேஆட்டமிழந்தார். 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்த ஸ்ரேயஸ் ஐயர், கிறிஸ் வோக்ஸ் பந்தில் மார்க் வுட்டிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.


இதனால் 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் என்ற மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல், இன்னிங்ஸை கட்டமைத்தார். ராகுல், நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார்.

4-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியைப் பிரித்தார் டேவிட் வில்லி. அவரது பந்துவீச்சில் கே.எல். ராகுல், பேர்ஸ்டோவிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். 58 பந்துகளைச் சந்தித்த அவர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ரோஹித்துடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அரை சதமடித்து அபாரமாக ஆடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வீழ்ந்தார். 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷித் பந்தில் லிவிங்டன்னிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரோஹித்.

அப்போது அணியின் ஸ்கோர், 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா 8, மொகமது ஷமி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

அதன் பின்னர் கடைசி ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் ரன்களைக் குவிக்க முயன்றார். 47 பந்துகளில் 49 ரன்களைச் சந்தித்த நிலையில் அவர், டேவிட் வில்லி பந்தில் கிறிஸ் வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

பும்ரா 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன்-அவுட்டானார். குல்தீப் யாதவ் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலானும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடத் தொடங்கினர். ஆட்டத்தின் 5-வது ஓவரின் 5-வது பந்தில் டேவிட் மலானை, போல்டாக்கினார் பும்ரா. அவர் 17 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்து விளையாட வந்த ஜோ ரூட்டை, முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா.

பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், 10 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் எடுக்காமல், மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜானி பேர்ஸ்டோவையும் 14 ரன்களில் வெளியேற்றினார் ஷமி. இதனால் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த ஜாஸ் பட்லரை 10 ரன்களில், குல்தீப் யாதவ் போல்டாக்கினார். பின்னர் வந்த மொயீன் அலிநிதானமாக விளையாடினார். 31 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்த நிலையில், மொயீன் அலியை, மொகமது ஷமி பெவிலியனுக்கு அனுப்பினார்.

பின்னர் வந்த லிவிங்ஸ்டன் 27, கிறிஸ்வோக்ஸ் 10, ஆதில் ரஷித் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் வில்லி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு 2003-ல் இங்கிலாந்தை, இந்தியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷமி 4, பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஷமி, பும்ராவின்அபார பந்துவீச்சாலும், ரோஹித்தின் அபார ஆட்டத்தாலும் இந்திய அணி வெற்றியைச் சுவைத்தது. இதையடுத்து 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இந்தியஅணி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory