» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடம் பிடித்தார் ஷுப்மன் கில்!

வியாழன் 14, செப்டம்பர் 2023 10:38:25 AM (IST)



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் 2-வது இடம் பிடித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷுப்மன் கில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் ஓர் இடம் முன்னேறி 759 புள்ளிகளுடன் 2-வது இடத்தை அடைந்துள்ளார். கேப்டன் ரோஹித் சர்மாவும் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் 3 அரை சதங்கள் விளாசிய அவர், 707 ரேட்டிங் புள்ளிகளுடன் உள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 3 பேர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் 3 பேட்ஸ்மேன்களும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் பாபர் அஸம் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இமாம் உல்ஹக் 735 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பஹர் ஸமான் 705 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஓர் இடம் முன்னேறி 739 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக்கும் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தை அடைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா 21 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11-வது இடத்தை பிடித்துள்ளார். அவர்,கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 3 சதங்கள், 2 அரை சதங்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும், மார்னஷ் லபுஷேன் 24 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அணியின் கே.எல்.ராகுல் 10 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தையும், இஷான் கிஷன் 2 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும் அடைந்துள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் அவர், 9விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 692 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் ஓர் இடம் முன்னேறி 666 புள்ளிகளுடன் 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 8 இடங்கள் முன்னேறி 27-வது இடத்தை பிடித்துள்ளார். மொகமது சிராஜ் 9-வது இடத்தில் தொடர்கிறார். ஹர்திக் பாண்டியா 21 இடங்கள் முன்னேறி 56-வது இடத்தை அடைந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory