» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சிபிஎம் கண்டனம்! – புதிய கூட்டணி விவகாரத்தில் அரசியல் மோதல்

வெள்ளி 5, ஜூன் 2026 12:00:45 PM (IST)



புதிய கூட்டணி குறித்து பிரவீன் சக்கரவர்த்தியின் தன்னிச்சையான பதிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போதைய மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் ஒரு இடம் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை எம்.பி. பதவிக்குப் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்.பி. (MP) வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புதிய அரசியல் கூட்டணியில் த.வெ.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகியவையும் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இப்பதிவு ஏற்படுத்தியது.

இடதுசாரிகள் பெயரைக் குறிப்பிட்டது தவறு – சண்முகம் அதிரடி:

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த தன்னிச்சையான பதிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தின் வாயிலாகக் கடுமையான கண்டனத்தையும் மறுப்பையும் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறி, அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பெயரையும் பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய புதிய கூட்டணி அமைப்பது குறித்தோ, அல்லது இந்த வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ யாரும் இதுவரை எங்களை முறைப்படி அணுகவும் இல்லை; எவ்வித ஆலோசனையும் நடத்தவும் இல்லை.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது என்பது குறித்து ஏற்கனவே எங்களது கட்சியின் கொள்கை நிலைப்பாடு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், எங்களைக் கலந்தாலோசிக்காமல் இடதுசாரிகளின் பெயரைப் பயன்படுத்திய பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் இந்த பதிவை 'அதிகப் பிரசங்கித்தனம்' என்று தான் சொல்ல வேண்டும்" எனச் சண்முகம் சாடியுள்ளார்.

மாநிலங்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் இன்றி சமூக ஊடகங்களில் வெளியான இந்த வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு தவெக கூட்டணி அரசில் பெரும் பரபரப்பையும், தற்காலிக விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory