» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகை திருட்டு புகார் கூறிய நிகிதாவை கைது செய்ய வேண்டும்: அஜித்குமாரின் தாய் ஆவேசம்!

வியாழன் 5, பிப்ரவரி 2026 4:25:54 PM (IST)

தன் மகனை மிகவும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி நகை திருட்டுப் புகாா் அளித்தாா். இந்தப் புகாரில் திருப்புவனம் தனிப்படை போலீஸாா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், போலீஸாா் கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தனிப்படைக் காவலா்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா்கள் 5 பேரும் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில், "அஜித்குமாா் மரணத்துக்கு காவல் துறையினரே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினா் 10 பேருக்கும் தொடா்பு உள்ளது. எனவே, பிணை வழங்கக் கூடாது. நிகிதா அளித்த புகாரிலும் உண்மையில்லை" என்று கூறியது.

உடனே நீதிபதி, "ஒரு குற்றமும் இல்லாத விவகாரத்துக்காக ஒருவரை அடித்தே கொன்றுவிட்டனா். இதற்கு புகாா் அளித்தவரும் காரணம்தானே? யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும். இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல் துறையினருக்கு நீதிமன்றம் பாடம் புகட்டும்" என்று கூறி வழக்கை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில் மடப்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அஜித்குமாரின் தாய் மாலதி, "என் மகன் திருடன் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவு மகிழ்ச்சியளித்தாலும் என் மகன் இறந்ததைத் தாங்க முடியாத வருத்தம் இருக்கிறது.

கோயிலில் 11 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது. எனக்கு தெரியப்படுத்தவே இல்லை. 2 மணிக்குத்தான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். என் மகனுக்கு வியர்த்தது எல்லாம் ஒரு காரணம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஏன் என்னிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. மாலை 4.30 மணிக்குதான் எனக்கு தகவல் வந்தது.

யார், யாரோ அடித்ததாகக் கூறுகிறார்கள். என்ன காரணத்திற்காக என் மகனை அடித்தார்கள்? நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கிறார். யார் சொல்லி புகார் கொடுத்தார்? பெரிய இடத்தில் இருந்து வந்த உத்தரவின்படி செய்ததாக அந்த 5 போலீஸ்காரர்கள் சொல்கிறார்கள். அந்த பெரிய இடம் என்பது யார்? எனக்குத் தெரிய வேண்டும். என் மகனை அடிப்பதற்கு முன் என்னிடம் முதலில் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வியர்த்தது எல்லாம் காரணமா? நிகிதாவை கைது செய்ய வேண்டும்.

ஒன்றுமே அறியாத ஒரு அப்பாவியை மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல் இவ்வளவு கொடூரமாக அடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் சட்டத்தில் இடம் இருக்கிறதா? இப்படி கொடுமைப்படுத்த என் மகன் என்ன தீவிரவாதியா? அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியதுதான். ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டும்? மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள், சிறுநீரைக்கூட வலுக்கட்டாயமாக வர வைத்திருக்கிறார்கள். என் மகன் கூனிக் குறுகி இறந்து போயிருப்பான்" என வேதனையுடன் பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory