» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டு வரி, தண்ணீர் வரிகளை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

சனி 24, மே 2025 12:23:46 PM (IST)

பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தண்ணீர் வரிகளை திமுக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சிக்கு வந்த 48 மாதங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு இரண்டு முறைகளுக்கு மேல் சொத்து வரியை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் அறிவித்த ஸ்டாலின் மாடல் அரசு, இந்த ஆண்டு (2025-2026) முதல் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு / ஆஸ்பெட்டாஸ் வீடுகள், கான்கிரீட் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறது.

2021-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள், கழிவுநீர் அகற்றல் கட்டணம் மற்றும் மின் கட்டணங்கள் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படுகின்றன.

மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் பலமடங்கு உயர்வு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று அனைத்துத் துறைகளிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று அதிகரித்து வரும் ஊழல். இதன் காரணமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுதான் 48 மாதகால அலங்கோல ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியின் வேதனைகளை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், 2024-2025ஆம் ஆண்டுவரை ஓலைக் குடிசை ஒன்றுக்கு ரூ. 44-ம், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு ஒன்றுக்கு ரூ. 66-ம், கான்கிரீட் வீடு ஒன்றுக்கு ரூ. 121-ம் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர். மேலும், வீட்டு வரி ரசீதில் வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயர்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ. 500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300ம், ஓலை வீடுகளுக்கு ரூ. 200ம் வீட்டுவரி வசூலிக்கப்படும்.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். ஆனால், திமுக அரசோ, ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயர்த்தி, அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதுதான், இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் சாதனை.

கடந்த 2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள புதிய வரிவிதிப்பு ஆன்லைன் சேவையை அரசு முடக்கி வைத்துள்ளதால், புதிதாக வீடு கட்டிய மக்கள், வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் மாடல் அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

what?மே 28, 2025 - 06:57:34 PM | Posted IP 172.7*****

this is a family member Government looted all peoples money

peopleமே 24, 2025 - 08:50:08 PM | Posted IP 162.1*****

sir, DMK government is very good government

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory